பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நாடுதலும் ஒருத்தி ஒருவனை நாடுதலும் ஆசையாகாது. பயனின்றி உயிர்களை அரித்தழித்து உருக்குலைக்கும் பாலுணர்ச்சியின் வெறியில் மகளிரை நாடுதல் ஆசையாகும். உயிருக்குக் கடவுள் துணை. தாயிற் சிறந்த தயாவுடன் தண்ணளி சுரக்கும் துணை. கடவுளை வாழ்த்துதல் வாழ்வேயாகும். கடவுளை மாறா அன்பினில் வாழ்த்துதல் வேண்டும்.

அங்ஙனம், கடவுளை வாழ்த்துதல் ஆசையாகாது. அங்ஙனமின்றி, “இது வேண்டும், அது வேண்டும்” என்ற விண்ணப்பங்களுடன், விண்ணப்பத்தை நிறைவேற்றுவதற்காகக் கடவுள் மீது விருப்பமின்றி, விருப்பங்கள் மீது விருப்பத்துடன், கடவுளை வாழ்த்துதல் ஆசையாகும்.

ஆசை துன்பத்தையே தரும். ஆசையுணர்வில் சுவை புதிதன்று; பொருள் புதிதன்று; உணர்வும் புதிதன்று. எல்லாம் பழைய சுயநலத் தேவையின் மயம். அஃது அரிப்புடைய சொறிசிரங்கைப் போல உயிர் வாழ்க்கையை அரித்து எரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று, என்னை நான் நேசித்ததால், அடைந்தது, துன்பமே. நேற்றுக்கு முந்திய நாள் கதையும், அதுவே. ஆயினும் “நான்”, “எனது” என்ற நச்சு உணர்வுகள் மாற்றப்பட்ட பாடில்லை. திரையில் காட்சி மாறினாலும் உணர்வு மாறாது போனால் பயனில்லை. நாள்கள் மாறினாலும், நாடிடும் நாட்டம் மாறினாலொழியப் பயனில்லை. நேற்றைய துன்பமே இன்று மீண்டும் வருகிறது. நேற்றைய 'நான்' இன்று 'நாம்' ஆக மாறி வளர்ந்தால், துன்பம் தொலையும். நேற்று என்னுடையது. இன்று 'நம்முடையது' என்று மாறி, வளர்ந்தால் பயனுண்டு. 'நானில்' உலகமில்லை. ஆனால் 'நம்மில்' 'யானும்' அவலம் தரத்தக்க ஆசையினின்று விலகி அன்பு வடிவம் பெற்று ஆங்கு இருக்கிறது. ஆளுக்கு அழிவில்லை. தீமைக்கே அழிவு.