பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலத்தின் ஒரு சால் நிலம் உழப்பெற்று, அதற்கு அண்மைத்தாய அடுத்த சால் நிலம் உழப்பெறாது போகுமானால், முன்னர் உழுத உழவினால் பயனில்லை. அது போலவே நேற்றைய தீய பழக்கத்தை விலக்க அதனைச் சார்ந்து வரக்கூடிய தீய பழக்கங்களையும் விலக்க வேண்டும்.

நேற்றைய நற்பழக்கத்தை உறுதிப்படுத்திக் காப்பாற்றிக் கொள்ளப் புது நற்பழக்கங்களும் தேவை. பக்தியாகிற நற்பழக்கத்தை அரண் செய்து காப்பாற்றத் தொண்டு தேவை. இங்ஙனம் இனிய பழக்கங்களை விரிவாக்கிக் கொள்ளாமலும் வாழ்தல் வாழ்க்கை ஆகாது. இதனை அப்பரடிகள் “உழுத சாலில் உழவே விரும்பும் இழுதை நெஞ்சம்” என்று எடுத்துக் காட்டி இடித்துரைக்கின்றார். ஆதலால், வழக்கங்களையும் பழக்கங்களையும் மாற்றி நலம் பல பெருக்கி, நன்றுடை யானை வாழ்த்தி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சுவைத்தனவே சுவைக்க விரும்புதல் நெஞ்சத்தியல்பு; அங்ஙனம் மாறாது சுவைக்கத் தக்கன நன்றுடையான் திருத்தாள்களேயாம். மற்ற சுவைப் பொருள்கள் மாறாது போனாலும் சுவைத்தற்குரிய நோக்கம் மாறவேண்டும். இதனை,

                   எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
                   தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
                   டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
                   டிழுதை நெஞ்சமி தென்படு நின்றதே!

என்ற அப்பர் திருப்பாட்டால் அறியலாம்.

17. யாதினும் இனியன்

மனித உயிர் வாழ்க்கை சுவையொடுபட்டது. உயிரின் இயக்க உணர்ச்சி சுவைத்தலேயாகும் துய்த்தலும், சுவைத்தலும் உயிரின் பிறப்புரிமைகள். உயிர் வளர்தலுக்கும் சுவைப்