பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

235


பயன்படவேண்டிய காலத்தைக் களவு போகாமல் உரியவாறு பயன்படுத்தி அளவுக்குட்படாத அன்பால் ஐயாறப்பனை வாழ்த்தி வாழ்ந்திடுதல் வேண்டும் என்றார் அப்பர் அடிகள். அறநெறிப்படி காலம் போற்றுதலும் சிறந்த கடமையாகும்.

வளர்மதிக் கண்ணியி னானை
             வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங்
              காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாதோ ரன்போ
               டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
                யேறு வருவன கண்டேன்!
கண்டே னவர்திருப் பாதங்
                கண்டறி யாதன கண்டேன்!

என்பது அப்பர் அருள்வாக்கு.

19. சிற்றம்பலம் சென்றுய்விர்

சுடுகாட்டில் எரிகின்ற நெருப்புக்கிடையில் ஒருவன் கிடக்கின்றான். அவன் பிணமல்ல, அவனுக்கு உயிர்ப்பிருக்கிறது. ஆனால் உயிரோட்டமாக இல்லை. மெல்ல மூச்சு வந்து கொண்டிருக்கிறது. அவன் நெருப்பினால் எரிந்து அழிக்கப் படுகின்றான். எரி நெருப்பிலிருந்து அவனால் தப்பித்துக் கொள்ளமுடியும். ஆனாலும், உயிர்ப்பாற்றல் குறைவின் காரணமாக-பிணத்தின் தன்மையை எய்திவிட்டதன் காரணமாக ஆற்றலின்றி எரிநெருப்புச் சுடக்கிடக்கின்றான். சுடுகாட்டில் இங்ஙனம் கிடப்பதால் மற்றவர்களும் எடுத்துக் காப்பாற்ற முன் வரவில்லை. அவர்களுக்கு இவன் பிணமாகவே காட்சியளிக்கின்றான். தப்பித்தவறி உயிர்ப்பிருப்பதை அறிந்தாலும் சுடுகாட்டில் உயிர்ப்பிருப்பது ஏலாது; அது கேடு என்று கருதி எடுத்துக் காப்பாற்ற முன் வரவில்லை.