பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிந்தனை செய்து, தமக்குரியவனாகப் பெற்று உயிர்க்கும் பொழுதெல்லாம் உயிரின் கரணங்கள், தன்மை மாறித் திருவருள் வயத்தனவாக விளங்கித் தோன்றும்; இறைமைத் தன்மையே வெளிப்படும்; இன்ப அன்பே மேவி விளங்கும்; குற்றங்கள் நீங்கும்; குணங்கள் கால்கொள்ளும்; துன்பங் களில்லை; இன்பமே உண்டு. ஆக, உண்மையான இறை வழிபாடு என்பது, உயிர் உடல் கொண்டு வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் அனைத்துச் செயல்களிலும் திருவருள் மணங்கமழுதலேயாகும். தன் முனைப்பு நாற்றமேயிருத்தல் கூடாது.

தன்னலச் சார்பு, அறவே நீங்குதல் வேண்டும். வேண்டுதல் வேண்டாமை முற்றாக நீங்குதல் வேண்டும். மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கும் தன்மையிற் சிறந்து விளங்கவேண்டும். பழுதிலாத் துறவும், பீடுறுபண்பும் வீடும் வேண்டா விறலும், திருவருட் சார்புடையோரின் இலக்கணம். அவர்களை இனங்கண்டு கொள்ளும் அடையாளங்கள் அவை. அத்தகு சான்றோர் அச்சத்தினின்றும் நீங்கியவர்கள். அவலத்தினின்றும் விடுபட்டவர்கள். இறைவன் உவந்து குடியேறி நடமாடும் திருக்கோயில்கள் அவர்கள்! அவர்களே சான்றோர்கள். அவர்கள் மண்ணகத்தையும் விண்ணகமாக்குவார்கள்.

வழிபாடென்பது கைகளால் கும்பிடுவது மட்டுமன்று; மலரிடுதல் மட்டுமன்று; வாழ்க்கை முழுவதுமே சமயமாக இருக்கவேண்டும். ஊனை இடமாகக் கொண்டு உயிர் உயிர்க்கும் பொழுதெல்லாம் அது எந்த சந்தர்ப்பமாயினும் சரி, கொடிய துன்பங்கள் சூழ்ந்தாலும் சரி, அல்லது இன்பமே சூழ்ந்தாலும் சரி இறைத் தன்மையை உயிர்ப்பிப்பதாக இருக்க வேண்டும். அதுவே நிறை நலமிக்க சமய வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கைதான் பிறவிப் பிணிக்கு மருத்தாக அமையும்; ஞானத்திற்கு உணவாக அமையும். அத்தகைய சமய வாழ்க்கையே துன்பத் தொடக்கில்லாத வானகத்தை வழங்க வல்லது என்பது அப்பரடிகள் கருத்து.