பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

243


ஒரு தன்மைத்தாயிருக்கக் கூடியதன்று. நெஞ்சமும் கூட அப்படித்தான்! இறைவனைவிட்டு ஒரு நொடி பிரிந்திருந்தாலும் அது கெட்டுவிடும். புறத்தே மண்டித் திணிந்து கிடக்கும் தீமையை உடனே பற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. அதனாலன்றோ, “நினையாது ஒருபோதும் இருந்தறியேன்” என்று கூறுகின்றார். மாணிக்கவாசகரும் “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்று குறிப்பிடுகின்றார். நெஞ்சத்தை, இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே பழக்க வேண்டும். அஃது ஒரு பொழுது மறந்தாலும் உடன், பாசி மூடிக் கொள்ளும். ஆதலால் அப்பரடிகளுடைய நெஞ்சு எப்பொழுதும் - இடையீடில்லாமல் இறைவனுடைய திருவடிகளைத் தடவிக் கொண்டிருந்ததாம். இன்றோ, நம்முடைய கைகள்தான் இறைவனின் திருமேனிகளைத் தீண்டித் தடவுகின்றனவே தவிர, நம்முடைய நெஞ்சு அவனைத் தீண்டித் தடவுவதில்லை.

உடலுக்கு உயிர்ப்பு உயிர், உயிர்க்கு உயிர்ப்பு இறை, உடல் உயிர் உறவுக்கு இணைப்பு மூச்சுக் காற்று. இந்த இணைப்புக்கு அன்பே காரணம். இங்ஙனம், நெஞ்சத்தை இறைவன் தாளிணைகளுக்குத் தந்து வாழும் வாழ்க்கையே வாழ்க்கையென்றார் அப்பரடிகள். இறைவனை நமக்குப் பெற்றுத் தர வல்லது, நம்மிடத்தில் இருத்தி வைக்கவல்லது அன்பேயாகும். மாணிக்கவாசகர் இந்த அன்பினை ஆற்றல் மிக்க அன்பு என்று கூறுவார். அப்பரடிகள் “ஐயன் ஐயாறனார்க்கு, அன்பலால் பொருளுமில்லை” என்றார். அது போலவே, தொண்டு செய்தலே உயிர்க்கு ஊதியம் என்றார். அப்பரடிகள் காட்டிய இறைவனை விட்டுப் பிரியாத நெஞ்சம், அவர் காட்டிய அன்பும் அவர் காட்டிய தொண்டும் நம்மைச் சேருமாயின் அவலம் வந்து அடையாது. ஈறிலாப்பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பு கிடைக்கும். இம்மையோடன்றி மறுமையும் ஏமாப்புடன் வாழலாம்.