பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

255


தொண்டே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டவர். 'தொண்டலால் துணையுமில்லை' என்று உலகறியக் கூறியவர். திருக்கோயில் தொண்டு முதல், தெருவீதி பெருக்கும் தொண்டு வரையில் செய்தவர். சேக்கிழார், 'பார்வாழத் திருவீதிப் பணி செய்வார்’ என்று அப்பரடிகளைப் பாராட்டுகிறார். அப்பரடிகள் தம் “கைத் திருத்தொண்டின்" சிறப்பின் காரணமாக 'வாசியிலாக் காசு'. பெற்றவர். அப்பரடிகளின் வாழ்க்கை அன்பில் பழுத்த தவ வாழ்க்கை. அப்பரடிகள் அருளிச் செய்த பாடல்கள் அருளமுதப் பாடல்கள். அவர் தொண்டு ஞாலமுய்ய, நாமுய்யப் பயன்பட்டது; இன்றும் பயன்படவேண்டும்.

அப்பரடிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு அவர்தம் தொண்டு நெறி நிற்றலேயாம். திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ்க! வளர்க! உலகெலாம் மகிழ்க!

26. அப்பரடிகளின் அருள்நெறி

தமிழகம், வளர்ந்த நாகரிக மரபுகளைக் கொண்டு புகழ் பூத்ததாகும். மொழியியல், வாழ்வியல், கலையியல், சமயவியல் அனைத்திலும் தமிழகம் தனக்கென்று ஒரு மரபும், தனி நட்பையும் கொண்டு விளங்கிய பெருமையுடையது. காலந்தோறும் தமிழ் மொழியையும் தமிழ்நெறி மரபுகளையும் வளர்த்துப் பாதுகாத்த வரலாற்றுப் பெருமை தமிழினத்திற்கு உண்டு.

ஆயினும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ் மொழி வரலாறு- தமிழின் ஒருமைப்பாடு, சமயநெறி ஆகியனவற்றைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் ஒரு தொய்வு ஏற்பட்டது உண்மை. செந்தமிழ் வழக்கில் அயல் வழக்கு புல்லுருவி வடிவத்தில் ஊடுருவியமையால் தமிழ் மக்கள் ஏமாந்தனர். ஏமாற்ற வந்தவர்கள் ஏற்றங் கொண்டனர். தமிழ் மொழியில் அயல் மொழிச் சொற்களில் ஊடுருவல்!