பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருத்தலங்களுக்கிருந்த தமிழ்ப் பெயர்களில் மாற்றம்! திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் - இறைவியின் தமிழ்ப் பெயர்கள் மாற்றம்! வரலாற்று அடிப் படையில் புகழ்பெற்ற திருத்தலங்களுக்குப் பொருந்தாப் புராணங்கள் செய்து, புகழ் மங்கச் செய்தல்! கொள்கை - கோட்பாடுகளில் கலப்படம்! எல்லாம் செய்யப் பட்டன! தன்னையும், கடவுளையுமே நம்பும் தமிழர்கள் சிறு தெய்வங்களை நம்பத் தலைப்பட்டனர்; நாளையும் கோளையும் கூட நம்பி வழிபடத் தலைப்பட்டு விட்டனர். தமிழர்களின் அறிவு கெட்டது; ஆள்வினைத்திறன் சுருங்கிற்று. வாழப் பிறந்தவர்கள் பிழைப்பு நடத்தத் தலைப்பட்டனர்.

இந்தப் படுவீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை மீட்க ஏழாம் நூற்றாண்டில் ஒரு பேரொளி எழுந்தது; நாடு முழுவதும் ஒளி வீசியது; கண்மூடித்தனமான மூடப்பழக்கங்களைச் சுட்டெரித்தது; ஞானத்தைப் பரப்பியது. தமிழர்கள் எழுச்சி பெற்றனர்; ஏற்றம் பெற்றனர். அந்தப் பேரொளி எது?

அந்தப் பேரொளிதான் ஞாலமெலாம் 'அப்பரடிகள்' என்று புகழ்ந்து போற்றும் தமிழ்த் தலைவர். அப்பரடிகள் அயல் வழக்கின் காரணமாக வந்து மண்டிக் கிடந்த தீமைகளைச் சாடினார்; மக்களுக்கு அறிவு விளக்கம் தந்தார்.

முடியாட்சியை எதிர்த்த முதல்வர்

உலகம் முழுவதும் “அரசனின் ஆணை ஆண்டவனின் ஆணை” என்ற கொள்கை இருந்தபொழுது தமிழ்நாட்டில் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்திற்கு முரணாக இருந்து முடியாட்சியை, எதிர்த்துப் புரட்சி செய்த முதல் தலைவர் அப்பரடிகள்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை