பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27
தொண்டின் நெறி சிறக்க

மனித உலகத்தை அன்பு வழியில் நடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது கடவுள் நெறி. சமயம் வாழ்க்கையின் தத்துவம். தமிழர்களைப் பொறுத்த வரையில் சமய வாழ்வு கற்பனையன்று, பொய்யுமன்று, புனர்ந்துரையுமன்று. தமிழினத்தின் சமயக் கொள்கைகள் உயர்ந்த அனுபவ ரீதியான வாழ்க்கையிலிருந்து தோன்றியவை - வாழ்க்கையோடு கலந்தவை.

உலகில் பல்வேறு இனங்களில் சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனைகள் அரசியல் அரங்கங்களிலும் புரட்சிக் களங்களிலும், தோன்றியுள்ளன. தமிழகத்திலோ சமுதாய மறு மலர்ச்சித் திட்டங்களை, காலத்திற்குத் தேவையான முன்னேற்றக் கொள்கைகளைச் சமய நெறிக் காவலர்களாகத் திகழ்ந்த அடியார்கள் தமது செவ்விய வாழ்க்கையாலும், சிந்தனையாலும், உருவாக்கினார்கள்.

உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய சமுதாய முற்போக்குச் சிந்தனையாளர்கள் வரிசையில் வைத்தெண்ணப்பட வேண்டியவர் அப்பரடிகள். மனித இனத்தின் ஈடேற்றத்திற்காக நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி ரஷ்யப் புரட்சி ஆகியனவெல்லாம் தோன்றுவதற்குப் பலநூற்றுக் கணக்கான ஆண்டுகட்கு முன்பே, சான்றோர் தோன்றும்