பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொண்டின் நெறி சிறக்க

267


திலும், பதி புண்ணியம் சிறந்தது. இக் கொள்கை தத்துவ ரீதியில் தவறானதன்று. ஆனால் திரிபுவாதமும் மயங்கிய பொருளும் கற்பிக்கப் பெற்றது. அதன் காரணமாகச் சைவ உலகத்திலிருந்து சங்க காலத்தில் சோழர் காலத்தில் நாயன்மார் காலத்தில் இருந்த தொண்டின் முறை விலகிச் சென்று விட்டது. ஆனால் சமய ஆசிரியர்களோ, சந்தான ஆசிரியர்களோ அவர்கள் அருளிய நூல்களோ இக் கொள்கைக்கு ஆதாரமாக இல்லை. சிவஞான போதமும், பதி புண்ணியம், பசு புண்ணியம், என்ற பாகுபாட்டைக் காட்டுகிறது. வேறு பாட்டை ஒத்துக் கொள்கிறது. ஆனால் இந்த வேறுபாடும் சிந்தனையைப் பொறுத்ததேயன்றி செயலைப் பொறுத்ததன்று.

தற்போதத்தோடு - தன்னுணர்வோடு செய்யாமல் சிவச் சிந்தனையோடு செய்ய வேண்டும். ஆண்டான் நினைவோடு ஆருயிர் அனைத்தையும் ஒம்புதல் வேண்டும். இங்ஙனம் செய்யப் பெறும் பசு புண்ணியமும், பதி புண்ணியமேயாம். இதனைச் சேக்கிழார் “பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்” என்று கூறி விளக்குகின்றார். இக்கருத்தினையே திருமூலரும் “படமாடக் கோயிற் பகவர்க் கொன்றியில் நடமாடக் கோயில் நம்பர்க் கங்காகா; நடமாடக் கோயில் நம்பர்க்கொன்றீயில் படமாடக் கோயில் பகவற்கஃ தாமே” என்று பாடுகிறார். இப்பாடலின் கருத்தை இன்றைய அஞ்சல் முறை நமக்கு உணர்த்தும். நாம் விரும்பிய ஒருவருக்குச் சேர வேண்டும், என்று விரும்பி முகவரியை எழுதி உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிற அஞ்சற் பெட்டியில் இட்டாலும் அது உரியரையே சென்று சேரும். அது போல சிவபெருமானை நினைந்து அவனால் அங்கீகரிக்கப் பெற்ற எந்த ஓர் உயிர் வர்க்கத்திடமாயினும் நாம் ஒன்றைத் தருவோமானால் அது அவனையே சென்று சேரும். இத்தகைய மிகச் சிறந்த தொண்டின் நெறியை ஏழாம் நூற்றாண்டிலேயே மிக மிகத் தெளிவாக விளக்கியவர் அப்பரடிகள். அப்பரடிகள் தொடங்கி வைத்த தொண்டின் நெறியை மீண்டும் தொடங்கித் தொடர்ந்து செய்ய சைவத் திருமடங்களில் தலைவர்கள் முன் வரவேண்டும்.