பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29
அப்பர் அடிகள் காட்டிய நெறி

தமிழகம், அருள்நலம் கொழிக்கும் திருநாடு. விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் திருக்கோயில்கள் பல விளங்கும் நன்னாடு. கல்லெல்லாம் கலையாக்கிப் பேசும் பொற்சித்திரம் படைத்துப், பேணும் தெய்வமாக்கிப் பெரு நெறி கண்ட நாடு. தமிழ், இலக்கண வளம் பெற்றமொழி. ஆம் அதனினும் சிறப்பான இலக்கிய வளம் பெற்ற மொழி. 'ஆம்’ அதனினும் நெஞ்சை நெகிழச் செய்து நினைந்துருகச் செய்யும் பக்தி நெறியைப் பேணி வளர்ப்பதில் உலக மொழிகளில் தமிழே சிறந்தது.

தமிழக வரலாற்றில் போர்கள் உண்டு. காதல் உண்டு. ஆயினும் இவையிரண்டையும் விஞ்சி நிற்பது திருவருள் நெறியேயாகும். இத்தகு அருள் நலம் பெற்ற தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் ஒரு ஞாயிறு தோன்றிற்று. அது செங்கதிர் ஞாயிறல்ல; செந்நெறி ஞாயிறு: செங்கதிர் ஞாயிறு ஒரோ வழி சுடும். இஞ்ஞாயிறு மாறாச் செந்தண்மை ஞாயிறு! செங்கதிர் ஞாயிற்றுக்கு எழுதலும் படுதலும் உண்டு. இஞ்ஞாயிற்றுக்கு அவை யில்லை.