பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜீவா பார்வையில் அப்பரும் மணிவாசகரும்

285


பிரபுத்துவத்தின் மறுபதிப்பாக விளங்குகின்ற தர்மகர்த்தாக்களை ஆட்கொள்வதற்காக அல்ல-மடாதிபதிகளை ஆட் கொள்வதற்காகவும் அல்ல. மனிதரை-சாதாரண மனிதரை கருப்பனை-சிகப்பனை ஆட்கொள்ளுவதற்காக இறைவனே இம்மண்ணுலகிற்கு வருகின்றான்,” என்று அவர் முழங்கிய போது அரங்கத்தில் கையொலி அலையென எழுந்தது! மீண்டும் தொடர்ந்தார்: “ஆட்கொள்ளும் வேலையின்மையால் வானையே பழிக்கின்றான் கடவுள். இன்றையச் சமயமோ வேலை செய்வதைக் குற்றமெனக் கருதி, உண்டு உறங்கி வாழ்கிறது. ஜீவா கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜீவா சொல்லுவதைக் கேட்க வேண்டாம். உங்கள் மாணிக்கவாசகர் சொல்லுவதையாவது கேட்க வேண்டாமா? மனிதன் பட்டினியால் நோயால் வாடியலையும் போது அவனை ஆட்கொள்ளும் பொறுப்பு யாருக்கு? மாணிக்கவாசகரைப் பாராட்டும் பரம்பரையினருக்கு இல்லையா? நெஞ்சில் கை வைத்துச்-சொல்லுங்கள்” என்று அவர் ஆவேசத்தோடு கேட்டபோது அரங்கில் உருக்கம் கலந்த அமைதி நிலவியது. அன்று அவர் பேசிய பேச்சில் சைவத்தின் சின்னமில்லை-சடங்கில்லை. ஆயினும் அதன் சாரமிருந்தது.

பிறிதொரு நாள் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருப்புத்துாரில் திருத்தளிநாதர் திருக்கோயிலில் திருமுறை விழா மேடையில் நால்வர். சந்நிதியில் அமரர் ஜீவா நின்று, ‘நான் கண்ட அப்பர்' என்ற பொருள் பற்றிப் பேசியது இன்றும் அத்திருக்கோயிலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பூதியடிகளே அமரர் ஜீவா வடிவில் வந்து அப்பரடிகளைப் போற்றிப் புகழ்வது போலிருந்தது! கம்பீரக் குரலில் “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பாடலை அவர் இடி முழக்கமென எடுத்துக் காட்டினார்: “உலகில் முடியாட்சியை எதிர்த்து போராடியவர்கள் வரிசையில் அப்பரடிகளும் நிற்கின்றார். அவர்தம் பெயரை நானிலமும் நாடும்