பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அப்பரடிகள் அருளிய இத் திருப்பாடல் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியினையே குறுகி னோமே.

என்பதை உணர்ந்தறிக.

ஆதலால், அப்பரடிகள் தம்மைத் தளைகளிலிருந்து விடுதலை செய்துகொண்டு- பரிபூரண சுதந்திர மனிதராய் விளங்கினார். அப்பரடிகள் சந்தித்த முதற் போராட்டம் பல்லவ அரசின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டம்! இந்தப் போராட்டத்தில் அறவழியில் துன்பங்களை ஏற்று, அனுபவித்துப் போராடிய வகையில் தமிழக வரலாற்றில், அப்பரடிகளே முன்னோடியாவார். பல்லவப் பேரரசை, அப்பரடிகள் எதிர்த்துப் போராடிய போராட்டத்தில், பெற்ற தண்டனைகள் பலப்பல. பாற் சோற்றில் நஞ்சு கலந்து கொடுத்தது, யானையின் காலில் இடறச் செய்தது, நீற்றறையில் இட்டது, கல்லில் கட்டிக் கடலில் எறிந்தது ஆகிய கொடுமையான தண்டனைகள் வழங்கப்பெற்றன. இந்தக் கொடிய தண்டனைகளை தைரியமாக ஏற்றுப் போராடி, இறைவன் திருநாமத்தால் வெற்றிபெற்றவர் அப்பரடிகள். அதிகாரமும் ஆயுதங்களும் இன்றி ஆதிக்கக் குணமுள்ள ஓர் அரசை எதிர்த்துப் போராடிய அப்பரடிகள் ஒரு போராளியர்தானே!

அப்பரடிகளிடம், துணிவும், வீரமும் இருந்தது போலவே அடக்கமும் எளிமையும் இருந்தன. அப்பரடிகளை ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டு, அப்பரடிகளைக் காணாமலே, உணர்வினால் போற்றித் தொழுது வாழ்ந்து வந்த அப்பூதியடிகளிடம், அப்பரடிகள், தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட முறை நம்மனோர்க்கு எடுத்துக் காட்டு.