பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழகம் நெறி தவறி மயங்கிக் கிடந்தபொழுது, இந்த ஞாயிறு தோன்றிற்று. தமிழினத்திற்கு - தமிழுக்கு - தமிழ் நெறிக்குப் புத்துயிரூட்டிய அப்பரடிகளே ஏழாம் நூற்றாண்டில் எழுந்த ஞாயிறு. அப்பரடிகள் உலக மனித சமுதாய வரலாற்றிலேயே போற்றத்தக்க விழுமிய பெருமையுடையவர். உலகம் முழுவதும் அகத்தாலும் புறத்தாலும் ஒடுங்கி முடியாட்சியின் கீழ் ஆட்பட்டிருந்த காலம். அப்பரடிகளோ கொத்தடிமைத் தனத்திற்கு மூல காரணமாகிய முடியாட்சியின் சின்னமாகிய மன்னனின் அதிகாரத்தை முதன் முதலில் எதிர்த்தவர். 'நாம் யார்க்கும் குடியல்லோம்' என்று அரசை நோக்கி முதன் முதலில் பேசிய பெருமை - முடியாட்சியை மறுத்த பெருமை அப்பரடிகளுக்கே உண்டு.

அது போலவே, 'மக்கள் குலம் ஒன்று, அவர்களிடையே எந்தவகையான வேறுபாடும் இருத்தல் கூடாது' என்ற இனிய கருத்தைத் தொன்மைக் காலத்திலேயே எடுத்தோதியவர் அப்பரடிகள். “கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்று கேட்கிறார். மனிதகுல ஒருமைப்பாடு அப்பரடிகளின் இலட்சிய கீதமாக இருந்தது. “வடமொழி ஆனான் கண்டாய்; தென் தமிழ் ஆனான் கண்டாய்!” என்று பாடி ஒருமை யுணர்வை யூட்டுகிறார். “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று இந்திய ஒருமைப்பாட்டுக்கு முதன் முதலில் கால்கோள் செய்த பெருமை அப்பரடிகளுக்கேயுண்டு.

அடுத்து முடியாட்சியை எதிர்த்து முழங்கி, மரணத்தையும் வென்று வாழத்துாண்டுகிறார். மனித உலகத்துக்குச் சாதல் ஒரு பெரிய கொடுமை. சாகாமல் இருப்பதற்குரிய வழி வகை காண்பதில் அறிவியல் உலகமும் அருளியல் உலகமும் தொடர்ந்து முயன்று வருகின்றன. அந்த முயற்சிகளின் பயனாகச் சாதற்குரிய நாள் நீண்டு, வாழ்தலுக்குரிய நாள் வளர்ந்து வருகிறது. சாதல் ஒரு கொடுமை. ஆயினும்