பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழகச் சமய நெறியைப் பேணிக் காக்கக் காலத்திற்குக் காலம் ஞானிகள் தோன்றியுள்ளனர்.

தமிழக வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு விழுமியது. வரலாற்றுச் சிறப்புடைய இந்த நூற்றாண்டில்தான் ஞானத்தின் திருவுருவாக, நான்மறையின் தனித்துணையாக ஞாலமுய்ய, நாமுய்ய, சைவ நன்னெறியின் சீலமுய்யத் திருஞான சம்பந்தர் திருவவதாரம் செய்து, திருநெறிய தமிழின் மூலம் புறச்சமயப் பகை கடிந்து நமது சமய நெறியை வளர்த்தார். இதே நூற்றாண்டில் திருநெறிய தொண்டின் நெறி வாழத் திருநாவுக்கரசர் திருவவதாரம் செய்தருளினார். ஞாலத்தின் இருள்நீக்கும் ஞாயிறெனத் திருஞானசம்பந்தரும் திங்களெனத் திருநாவுக்ககரசரும் தோன்றிப் பணி செய்தருளினர்.

அப்பரடிகள் சான்றாண்மைக்குச் சான்றாக விளங்கிய தொண்டை நாட்டின் தென்பால், திருவாமூர் என்னும் திருப்பதியில் வழிவழி தாளாண்மையிலும் வேளாண்மையிலும் நனி சிறந்த குடும்பத்தில் திருவவதாரம் செய்தார். அப்பரடிகள் இளமையிலேயே பெற்றோரை இழந்து, பெருகிய தவத்திற் சிறந்த தமக்கையார் திலகவதியாரால் வளர்க்கப்பெற்றார். அப்பரடிகளுக்கு இளமைக் காலம் தொட்டு ஆறாத அறிவுப்பசி, இந்த அறிவுப்பசியோடு பெற்றோர் பிரிவுத் துன்பமும் சேர, துன்ப நீக்கத்திற்கு வழியெது என்று ஆராயும் வகையில் “துறத்தலே துன்ப நீக்கத்திற்குரிய வழி” என்ற நெறியைக் காட்டும் சமண சமயத்தைச் சார்ந்தார்.

சமண சமயத் தத்துவ நூல்களைத் துறைபோகப் பயின்றார். சமண முனிவர்களாலேயே 'தருமசேன'ர் என்று பாராட்டப்பெற்றார். தம்பியைப் பிரிந்த தமக்கை திலகவதியார் - திருவாமூரினின்றும் நீங்கித் திருவதிகை திருத்தலம் சென்று நாளும் தவம் செய்தார். உடன் பிறந்த