பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழிப்பட்ட பொதுமைச் சமுதாயத்தைக் காக்கும் நிறுவனங்களாக விளங்காமல், சாதிகளையே காப்பாற்றி வருகின்றன. அப்பரடிகள் சாதி வேற்றுமைகளை மிகக் கடுமையாகச் சாடுகிறார். இன்றே போல, அன்றும் சாத்திரங்களை ஆதாரமாகக் காட்டிச் சாதி வேற்றுமைகளை நியாயப்படுத்தி அப்பரடிகளிடம் வழக்காடியுள்ளனர் சனாதானிகள். தண்ணருள் சார்ந்த நெஞ்சம் உடைய அப்பரடிகள் இந்தச் சனாதனிகளின் வீண்வம்படி வழக்கைத் தாங்க முடியாமல் திருப்பிக் கடுமையாகவே ஏசுகின்றார்.

சாத்திரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமுங் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும்மாற் பேறரே!

என்பது அப்பரடிகள் வாக்கு மக்கள் சிவத்தின் அருளைப் பெற்று நடமாடக் கோயில் எனப்படுவர். திருமூலர் வாக்கில் சிவம் எழுந்தருளுதற்குரிய நடமாடும் கோயில்கள்! அங்ஙனம் நடமாடும் உயிர்வர்க்கத்தின் அருமையை உணராமல், குலம் கோத்திரம் சொல்லி ஒதுக்குதல் நீதியுமன்று; நெறியுமன்று. பிறப்பில் வேறுபாடு காட்டுதல் பெருநெறி அன்று. சீலத்தின் காரணமாக வேறுபாடு காட்டினாலும் காட்டலாம். அதனைக் கூட அப்பரடிகளின் அருள் நெஞ்சம் ஏற்றுக் கொள்ளவில்லை.

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே,

என்பது அவர் திருப்பாட்டு. ஏகாந்தர் = அன்பர்.