பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

295


பிணிகளையும் உயிர்ப் பிணியையும் ஆக்கும். அடிமை வாழ்க்கையின் அவலங்களை எதிர்மறையால் சுட்டிக்காட்டி அடிமை விலங்கை அறுத்தெறியச் சொன்ன முதற் கவிஞர் அப்பரடிகளேயாவார். சுதந்திரமான ஆன்மாவால்தான் இறைவனை அணுக முடியும். அனுபவிக்க முடியும். கோழைமையும் கொத்தடிமைப் புத்தியும் உடையவர்கள் அச்சத்தின் அடிமைகள்; அருள்நெறிக்குப் புறம்பானவர்கள். ஆண்டவன் அவர்களை ஏறெடுத்தும் பாரான், சுதந்திரம் இறையருளின் நியதி; இதனை அப்பரடிகள் தமது பாடலில் தெளிவாக விளக்குகின்றார். பல்லவப் பேரரசன் ஆணையை மறுத்து, அரசனைப் பார்க்க மறுத்துவிட்டார். அப்பரடிகளது வழியினைத் தொடர்ந்தே பாரதி,

பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் - பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்,

என்றான்.

ஆக, அரசியல் அடிமைத் தனத்தை எதிர்த்துப் போராடியதில் “வால்டேரு"க்கும் “ரூஸ்ஸோ"வுக்கும் “ஜார்ஜ் வாஷிங்ட"னுக்கும் முன்னோடி, அப்பர் அடிகள் என்பதே உண்மை.

அப்பரடிகள் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு; இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு. நாம் வாழும் இந்தத் தலைமுறையில், புதியன என்று கருதிப் போற்றும் கொள்கைகள் பல உண்மையில் புதுமையல்ல. அவை, இந்த நூற்றாண்டுக்கும் உரியனவல்ல. இந்தச் சமயத்தில் நிலவும் சாதி வேற்றுமை மிகக் கொடுமையானது. அறிந்தோ அறியாமலோ இந்தச் சாதி வேற்றுமை பல நூறு ஆண்டுகளாகப் பேணப் பெற்று வருகிறது. இந்து சமய நிறுவனங்கள், திருக்கோயில்கள், திருமடங்கள் அப்பட்டமான சாதீய நிறுவனங்களாக உருப்பெற்று விட்டன. இவைகள் இன்று சமய நெறியைக்காக்கும் நிறுவனங்களாக, சமய