பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

311


உடலினுள் இருந்து உயிரும், மாற்றாரும் அறியமுடியா வண்ணம் நின்று அருள் செய்யும் இறைவன் வினை நீக்கத்திற்குப் பிறகு, பலரும் காணும் திருக்கோயிலென்ன உயிரிடத்து முழு விளக்கமுற வீற்றிருக்கின்றான். இறைவன் உள்ளத்து இடங்கொண்டமையின் காரணமாக அன்பாகிய ஊற்றுக்கண் திறக்கிறது, உயிரிடத்து ஆற்றல் மிக்க அன்பைத் தூண்டுகிறது. இந்த நிலையில் அன்பும் சிவமும் ஒன்றென்ற குரல் எழும்புகிறது, அன்பினாலாவது இன்பமே. அன்பினாலல்லது வன்பினால் ஆவது எப்பொழுதும் இன்பமன்று. அஃது ஒரு சேறு. அன்பினால் இன்புறுத்துகிறார். அன்பு பெருகி இன்பத்தில் திளைக்கும் பொழுது மேலேது? கீழேது? உயிர், இன்புறுத்தும் பொருளிடத்தில் அடிமையாகிறது. இது அறிவியல் அடிமை; உண்மையின் பாற்பட்ட அடிமை. இத்தகைய இறைவன் திருவருளை நினைந்து வாழ முடியாமல் பிற தெய்வங்களை வணங்குவதும், பிறநெறிகளைச் சார்வதும் வேடிக்கையாக இருக்கின்றன. அப்பரடிகளே தம் வரலாற்றினை நினைந்து வியந்து பாடுகிறார். முயல், நிலத்தில் திரிவது, அதனால் அதைப் பிடிப்பது சுலபம். எளிதில் பிடிக்கக்கூடிய முயலைப்பிடிக்காமல் விட்டு விட்டு, எளிதில் பிடித்தற்கியலாத காக்கையைப் பிடிக்க, காக்கையின் பின்னே ஒடித் திரியும் செயலை நினைவுபடுத்துகிறார். காக்கையோ வானில் பறக்கிறது. மனிதனுக்கோ பறக்கும் சக்தியில்லை. எங்ஙனம் பிடிக்க முடியும்?

கையிலிருக்கும் முயலை விட்டுவிட்டுக் காக்கையைப் பிடிக்கப் போவதாகவும் பொருள் கொள்ளலாம். முயல் சிவநெறி. நாம் பிறந்த நெறி, எளிதில் அமைந்த இனிய நெறி; இன்றமிழ் நெறி; ஆரத்துய்த்து மகிழத் துணை செய்யும் தூய நெறி; எளிய நெறி; இந்நெறியில் பிறந்திருந்தும் இந்நெறி நின்று வாழாது பிற நெறிகளைத் தேடியலைவதும், தாயிற் சிறந்த தயாவுடைய நம் சிவன் தாளினைத் தொழாது வேறு தெய்வங்களைத் தேடியலைவதும் காக்கையின் பின் ஒடுவதை யொக்கும். இந்த இனிய பாடலைப் பாடிப் பயிலுக.