பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

313


களைத் தொடுத்ததோடன்றிச் செய்யக் கூடாததை மறுத்துச் செய்ய வேண்டியதையும் வற்புறுத்துகின்றார். அதாவது “எங்கும் ஈசன் இருக்கிறான்” என்று அன்பு காட்ட ஆணையிட்டார்.

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்?
கொங்கு தண் குமரித் துறையாடிலென்?
ஒங்கு மாகடல் ஒத நீ ராடிலென்?
எங்கு மீசன் எனாதவர்க் கில்லையே

என்று பாடுகிறார்.

நமது சமுதாய வாழ்க்கையில் பலர் கூடி உண்ணும் பொழுது ஒருவரோடொருவர் பேசாமலேயே உண்கிறோம். உண்ணும்பொழுது பேசுவதைப் பெரியோர்கள் அனுமதிப்பதில்லை. அங்ஙனம் பேசுவது, ஆசாரக்கேடு என்று கருதுகிறார்கள்; கண்டிக்கிறார்கள். குழந்தைகள் உண்ணும் பொழுது பேசத் துடிக்கிறார்கள். பெரியோர்கள் அடக்குகின்றனர். பேச்சுக்குப் பதில் அழுகை பிறக்கிறது. இங்ஙனம் உண்ணும்பொழுது உரையாடக் கூடாது என்ற வழக்கம் எப்பொழுது தோன்றியது? யாரிடமிருந்து வந்தது? என்று அறிந்து கொள்ளுதல் சுவையான செய்தி.

தமிழர் வாழ்வில் சமண சமயம் வந்து கலந்தபொழுதே இந்த வழக்கம் வந்திருக்கிறது. தமிழினம் சமண சமயத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களையறியாமலே அந்தச் சமயப் பழக்க வழக்கங்கள் சில அவர்களுடைய வாழ்க்கையில் வந்து பொருந்தியுள்ளன. சமணர்களின் சீரிய ஒழுக்கங்களுள் தலையாயது, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அல்லது திட்டமிட்டோ தற்செயலாகவோ பிற உயிர்களைக் கொலை செய்யக்கூடாது என்பது. தற்செயலாகவும் உயிர்க் கொலை நிகழக் கூடாது என்பதற்காகச் சமண சமயம் சில ஒழுக்க விதிகளை விதித்திருக்கிறது. அவற்றுள் ஒன்று திறந்த வாயினராக இருத்தல் கூடாது