பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமய இலக்கியங்கள்

329


வாழ்க்கையிலிருந்து சமயம் பிரிந்து நெடுந்தொலைவு விலகி, வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டும் விளங்குவதால் பலர், தொல்காப்பியத்தைச் சமய நூல் என்று கருதுவதில்லை.

தொல்காப்பியர் காலந்தொட்டே நெறிமுறை உணர்வு, தமிழர் வாழ்வில் பொதுளியிருந்ததால் பின் தோன்றிய சங்க கால இலக்கியங்கள்-காதல்-வீரம் பற்றி மிகுத்துக் கூறினும் வாழ்வாங்கு வாழும் ஆர்வத்தையும் காண்கின்றோம். சங்ககால இலக்கியங்களில் பரிபாடலும், திருமுருகாற்றுப் படையும் தனித்தன்மையுடைய சமய இலக்கியங்களாகும்.

பரிபாடல் மிகச் சிறந்த சமய இலக்கியம். உயிர், உலகியல் தொடர்புடைய வேட்கைகளின் ஆர்வம் காட்டித் தேடும் இயல்பினது. இவ்வுலகில் உயிர் வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது; தவிர்க்க முடியாதது. தேவைகள் வாழ்க்கையை உந்திச் செலுத்துவன.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

என்பது தமிழ்மறை. ஆனால் பரிபாடலில் பொன்னை விரும்பி வேண்டவில்லை. பொருளை விரும்பி வேண்ட வில்லை. போகத்தை விரும்பி வேண்டவில்லை. ஏன்? பொன்னும் பொருளும் மானிட சாதியின் படைப்பாற்றல் துணைக்கொண்டு படைக்கப்படுவன. போகம் அதாவது இன்புறுதல் மனித நலன்களைப் பொறுத்தது. இவற்றை இறைவனிடம் கேட்கும் பழக்கம் தமிழ்ச் சமய நெறியில் இல்லை. கேட்டாலும் இறைவன் தரமாட்டான். அவன் காரணங்களாக அருள் செய்வானேயன்றிக் காரியங்களாக அல்ல. என்ன வேண்டப்படுகிறது? அருள் வேண்டப் படுகிறது; அருளைப் பெற்றுத் தரும் அன்பு வேண்டப்படுகிறது. அருளையும் அன்பையும் படைத்திடும் அறம் வேண்டப்படுகிறது.