பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமயம் என்பது “சமைத்தல்” என்னும் சொல்லின் அடிப்படையில் பிறந்தது. மானிட வாழ்க்கை, புலன்களின் நுகர்வுகளால் ஆயது; நுகர்வுகளுக்கு வாயிலாக இருக்கின்ற பொறிகளால் ஆயது. இப்புலன்களும் பொறிகளும் உயிரின் நலத்திற்கு ஒத்திசைந்து, உள்ளவாறு இயங்கினால் உயிர் நலமுறும். ஆனால், இயற்கையில் புலன்களும் பொறிகளும் உயிரோடு ஒத்துழைப்பதில்லை. எந்த உயிருக்கு நன்மை செய்து இன்புறுத்த வேண்டுமோ அந்த உயிருடன் இப் புலன்களும் பொறிகளும் போராடும்; அதை அலைக்கழிவு செய்யும். இதனால், உயிர்க் குலத்தின் வாழ்க்கை தடம் புரண்டு போகிறது.

மனித அறிவு, எண்ணத் தொடங்கிய காலந் தொட்டு - சற்றேறக்குறைய 14500 போர்கள் உலகத்தில் நிகழ்ந்துள்ளன. இப்போர்கள் நாடுகளுக்கிடையே நடந்த போர்கள். சாதிகளிடையே நடந்த போராட்டங்கள், மதங்களுக்கிடையே நடந்த போராட்டங்கள், வீடுகளுக்கிடையே நடந்த போராட்டங்கள், வீடுகளுக்குள் நடந்த போராட்டங்கள் இந்தக் கணக்கில் சேரவில்லை.

இக்கொடிய போராட்டங்களில் கொன்று குவிக்கப் பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 364 கோடி என்றொரு புள்ளிக்கணக்கு பேசுகிறது. இப்புள்ளி விவரமும் நாடுகளிடையே நடந்த போர்கள் பற்றியதுதான். இங்கும் அங்குமாக நடைபெற்ற கொலைகள் இந்தக் கணக்கில் சேரா. ஏன் இந்த அவலம்? உயிரை, உயிரின் உணர்வை அன்பில் சமைத்து உலகு தழீஇய வாழ்க்கை வாழச் செய்யும் சமயநெறியில் ஈடுபடாமைதான்.

புலன்களையும், பொறிகளையும் பக்குவப்படுத்தாமல் அவைதம் வழியில் விடுவதில்தான் விபத்து இருக்கிறது.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு