பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமயக் கலப்படங்கள், தெளிந்த சிந்தனைகளுக்குத் தடைகள். ஆதலால், சமயச்சாயல் தழுவிய இலக்கியங்களும், சமய இலக்கியங்களாகவே திகழும். திருமுறைகளும் வேறுபாடுகளைக் கண்டிக்கின்றன; மனித உலகத்தின் பொதுமை நலத்திற்கு இடையூறாக வாழ்ந்த சிலர், தன்னயப்பின் காரணமாகச் சாதிகளைத் தோற்றுவித்தனர்; குலங்களைக் கண்டனர். கோத்திரங்களைக் கூறினர். இவையெல்லாமே இல்லாதவையா? இல்லை. அவை எந்த நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பெற வேண்டுமோ, அந்த நோக்கத்தின் வழியில் நடைமுறைப்படுத்தப் பெறவில்லை. பிறப்பில் காணப்படும் வேற்றுமைகள் இயல்பாக அமைவன. அவை இயற்கை நியதிகளில் தவிர்க்க முடியாதவை. அதனால், பிறப்பின் வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தி ஒதுக்குதல் நன்னெறியன்று. பிறப்பின் அடிப்படையிலுள்ள வேற்றுமைகளைத் தவிர்த்து, தகுதியின்மைகளைத் தகுதிப்படுத்தி மக்களை உயர்த்துவதற்குத் தானே சமயம்! அச்சமயமே, தம் கடமையினின்றும் வழுவித் தாழ்த்தப்பட்டோர் என்று அவர்களை ஒதுக்குதல் முறையன்று. குலம், சமுதாய நியதியில் தவறான அமைப்பன்று. ஆனால், இச்சீரிய அமைப்பு முறை, முறைபிறழும்பொழுது சமயநெறியினின்றும் பிறழ்கின்றது. குலம் என்பது வழிவழி வரும் மரபு. உயர் குலத்தில் பிறந்ததனால் நாம் உயர்வுடையோம் என்ற கருத்தில் அகங்காரமுடையராகி ஒழுக்கமிலாது போதல் இவ்வுலக இயற்கை ஆயினும் அக்குலத்திற் கிசைந்த ஒழுக்கமிலராயினும் குலத்திற்குரிய பெருமை கொண்டாடுவர்; குலத்திற்குரிய பயன் கேட்பர். இது நன்னெறியன்று. இத்தகைய வாழ்க்கை சமயச்சார்புடையதன்று. ஆதலால், தமிழ்ச் சமய இலக்கியங்கள் ஒருமைப்பாட்டு நெறியை வலியுறுத்துகின்றன.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்