பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கங்கை ஆடில்என்? காவிரி ஆடில்என்?
கொங்கு தண்கும ரித்துறை ஆடில்என்?
ஓங்கு மாகடல் ஒதநீர் ஆடில்என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்(கு) இல்லையே

என்று பாடியருளினார்.

இத்தகைய அன்புநெறியில் நிற்பவர் தொண்டு நெறியின் தலைப்படுவர். அன்பு என்பது ஒர் உணர்வு. அது செயல்வழிதான் வெளிப்படும். அன்பின் வழியதாகச் செய்யப் பெறும் செயலே தொண்டு. அன்பின் வழியினர் தம் உடைமையைத் தனி உடைமை என்று கருதார். அவர்தம் உடைமை பயன்படும் வகையால் பொதுவுடைமைப் பாங்கினைப் பெறும். அறநிலைப் பொருளுடைமை என்பதைத் தான் 'தர்மகர்த்தா முறை' என்று பொருளியல் மேதைகள் கூறுகிறார்கள். அண்ணல் காந்தியடிகள் இந்திய சமூகப் பொருளாதாரத்திற்கு அறநிலைக் கொள்கையையே வற்புறுத்தினார். இன்றைய பாரத அரசியல் சிந்தனையும் இந்தக் கொள்கை வழி நின்று முன்னேற முயல்கிறது. நடைமுறையில் இந்தக் கொள்கை வெற்றிபெறுவது எளிதன்று. ஏன்? நம்முடைய சமூகப் பழக்க வழக்கங்கள் நெகிழ்ந்து கொடுப்பனவாக இல்லை.

அறநிலையங்கள் என்று பெயர் விளங்கி நிற்பனவற்றின் பொருளுடைமைகள்கூட மக்களுக்குப் பயன்படாமல் இருப்பதைக் காண்கிறோம். அவற்றிலேயே குறைகள் மலிந்தமையால் அவை அறவழியிற் செயல்படாமல் நெறிமுறைப் படுத்தப்பட வேண்டிய அளவுக்குத் தாழ்ந்து போயின. ஆயினும், அறநிலைப் (தர்மகர்த்தா) பொருளாதார முறை நடைமுறைக்கு வந்தால் நாடு நன்மையுறும். இந்த அறநிலைப் பொருட் கொள்கை (தர்மகர்த்தா முறை) ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகளாலேயே எடுத்துக் கூறப் பெற்றது. ஒருவர் மருத்துவம் பயின்றார். தம் சொந்தப் பொறுப்பிலேயே மருத்துவமனை அமைத்தார். அம்மருத்துவ மனையில்