பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

355


காடவர்கோமான் கட்டிய கயிலாயநாதர் திருக்கோயில் கடவுள்மங்கலம் எழுந்தருள்வதைத்தான் இறைவன் ஒத்திப் போட்டுவிட்டு, பூசலார் நாயனாருடைய மனக் கோயிலுக்கு முன்னுரிமை கொடுத்து எழுந்தருளினான்.

நம்பியாரூரரை எடுத்து வளர்த்த நரசிங்கமுனையரையன் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசன். இந்தக் காலத்திலேயே சுழறிற்றறிவார் என்று போற்றப் பெறும் சேரமான் பெருமானும் (சேரமன்னர்) வாழ்ந்தார்.

நம்பியாரூரர் காலத்தில் பல்லவர், பாண்டியர், சோழர், சேரர் ஆகிய மன்னர்கள் தமிழ்நாட்டை ஆண்டனர் என்பதும், இந்த அரசர்கள் சிவநெறியில் தோய்ந்த பக்தியுடையவர்களாய் இருந்தனர் என்பதும் புலப்படுகிறது.

நம்பியாரூரர் திரு ஆலவாய், திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் மூவேந்தர்களுடன் கூடி நின்று வழிபட்டதாகச் சேக்கிழார் கூறுகிறார்.

ஆதலால், நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர், கைத்திருத்தொண்டினால் நாட்டை நடத்திய திருநாவுக்கரசர் இவர்களைத் தொடர்ந்து திருவவதாரம் செய்தவர் நம்பியாரூரர்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இவர்களுடைய திருவவதாரம் அயல் வழக்கினை வென்று விளங்கப் பயன் பட்டது. ஆயினும் ஒன்றை வெற்றி பெற்றால் மட்டும் போதுமா? அதனைத் தழுவி நிற்பதற்குரிய நெறியை அறிமுகப்படுத்த வேண்டும்.

வாழ்க்கையைத் துன்பச் சுமையாகக் கருதிய கருத்துக்களை-நெறியைப் புலமாக்கிய பெளத்த, சமண சமயங்களின் கொள்கைத் தாக்கம் தமிழகத்தில் இல்லாமல் போய் விடவில்லை.

இந்தச் சூழ்நிலையில் வாழ்க்கையை அற்புதமானதாக விளக்கிக் கூறி நெறிப்பட வாழ்ந்து, இம்மையிலேயே