பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

357


தமிழ்க் குடியில் பணிப் பகிர்வு ஏற்பட்ட காலத்தில் திருக்கோயில் பூசனைக்கு என்று ஒதுக்கப் பெற்றவர்கள் ஆதிசைவர் என்ற மரபினராக வந்தனர். பண்டைக் காலத்தில் இவர்கள் தமிழ்க் குடியினரோடு உடனிருந்து உண்ணல், மகள் கொடுத்தல், எடுத்தல் முதலியன நிகழ்த்தி வந்துள்ளனர்.

இவர்கள் வைதிக சந்தி செய்யார். இவர்களுக்கு 'காயத்ரி' இல்லை. சைவ சமயத்தில் ஸ்மார்த்தக் கலப்புத் தோன்றிய பிறகுதான், ஆதிசைவர்கள் மெள்ள மெள்ள பார்ப்பனச் சார்புடையராயினர். ஏன்? பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் அரசர்களிடம் செல்வாக்கும் பெற்று வந்தனர்.

இதனால், ஏற்பட்ட பாதிப்பால் ஆதிசைவர்கள் பார்ப்பனரைச் சார்ந்து ஒழுகினர். அப்படியிருந்தும் ஒரு சிலர் தனித்து ஆதிசைவர்களாகவே அன்று போல் இன்றும் வாழ்கின்றனர். ஸ்மார்த்தக் கலப்புத் தோன்றிய பிறகுதான் திருக்கோயில்களில் பக்தர்கள் எல்லாரும் வழிபடும் முறைக்கு விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும்.

சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே கண்ணப்பர், திருநீலநக்கர், சாக்கியர் முதலியோர் திருக்கோயில் வழிபாடு செய்தமையை அறிகிறோம். முறையாகச் சிவபூசை செய்தல் எளிதாக எல்லோராலும் இயலாது.

ஆதலால், திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள இறைவனை முறையாக எழுந்தருளச் செய்து பூசித்து, வரும் பக்தர்கள் பூசனை செய்து கொள்ள, அருகிருந்து கற்றுக் கொடுப்பதும் செய்துகாட்டுவதும் ஆதிசைவர் பணி.

இந்நிலையில் நம்பியாரூரர், ஆதிசைவ மரபில் தோன்றினாலும் நரசிங்கமுனையரையர் என்ற மன்னரால் வளர்க்கப்படுகிறார். நற்றமிழ்ச் சுந்தரர் உருத்திர கணிகையர் மரபிலும், வேளாண் மரபிலும் திருமணம் செய்கிறார்.