பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பழந்தமிழ்க்குடி மரபுப்படி சுந்தரர் வரலாற்றில் ஆதிசைவ அந்தணர், அரசர், வேளாண் மரபினர் கலக்கின்றனர்.

ஆவணங்காட்டி ஆட்கொண்டான்

நம்பியாரூரை நரசிங்கமுனையரையர் “அன்பினால் மகன்மை கொண்டான்” என்று சேக்கிழார் பாடுகிறார். இதனால் அவரை நரசிங்கமுனையரையர் உரிமைப் பிள்ளையாக - காதற்பிள்ளையாக எடுத்துக் கொண்டார் என்பது உய்த்துணர வேண்டிய செய்தி.

மன்னர் திருவும், வைதிகத் திருவும் பொங்க நம்பியாரூரர் வளர்ந்தார்; வளர்ந்து மணப்பருவமெய்தினார். பெற்றோர் நற்றமிழ் நாவலூரருக்கு, புத்துார் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் பேசி முடித்தனர்.

திருமண நாளும் நாழிகையும் வந்தது. திருமணப் பந்தலில்-மணவறையில் நம்பியாரூரர்! திருமணக் கோலத்துடன் மணமக்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். மங்கலநாண் சூட்டும் நேரம்.

திருமணப் பந்தலில் ஒரு புதிய அந்தணர் நுழைந்தார். அங்கே குழுமியிருந்தவர்களையும் நம்பியாரூரையும் நோக்கி மணமகனுக்கும் தனக்கும் வழக்கு ஒன்று உண்டு என்றார்; திருமணம் நின்றுவிட்டது. மணப்பந்தலில் கூடியிருந்தவர்கள் வியப்படைந்தனர்; அதிர்ச்சியடைந்தனர்!

நம்பியாரூரர் முதியவரை அணுகி வழக்கு என்ன என்று வினவினார். “நீயும் உன் மூதாதையரும் எனக்கு வழி வழி அடிமை. அடிமை ஒலை இருக்கிறது” என்றார். நம்பியாரூரருக்கு அதிர்ச்சி! ஆதிசைவ அந்தணர் எப்படி ஒரு வேதியருக்கு அடிமையாக இயலும்? இந்த வழக்கு உலகில் இல்லையே!