பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கையிலிருந்து பிடுங்கிக் கிழித்தெறித்து விட்டான்” என்று வழக்கை எடுத்துக் கூறினார்.

திருக்கோயிலில் ஊரவையினர் “ஆதிசைவ அந்தணர் மற்றோர் அந்தணருக்கு அடிமையாதல் இல்லையே!” என்றனர்.

“நம்பியாரூரரின் பாட்டன் உளமார இசைந்து எழுதிக் கொடுத்த அடிமை ஒலை இருக்கிறது. நகல் ஒலையைத்தான் இவன் கிழித்தான்; மூல ஓலை என்னிடம் இருக்கிறது” என்றார் முதியவர்.

மூல ஓலையைப் பாதுகாப்பாக வைத்துப் பார்த்து விட்டுத் திருப்பித் தருவதாக உறுதி கூறினால் மூல ஓலையை அவையின் முன் வைப்பதாகக் கூறினார். அவையினர் ஒத்துக் கொண்டனர். வேதியர், அவையினர், முன் ஒலையை வைத்தார்.

அவையினரின் கரணத்தான் ஒலையை வாசித்தான். ஒலையில் “திருநாவலூரில் வாழும் அருமறைவல்ல ஆதி சைவனாகிய ஆரூரான் எழுதியது. வெண்ணெய் நல்லூரில் வாழும் முனிவர் பெருமானாகிய பித்தனுக்கு யானும், என் குடும்பத்தில் வழிமுறை வழிமுறையாக இனி வருபவர்களும் அடிமைத் தொண்டு செய்வதற்கு இதுவே ஆவண ஒலையாகும். உள்ளமும் செய்கையும் ஒத்த நிலையில் இதனை எழுதிக் கொடுக்கிறேன்! இதற்கு இவை என் கையெழுத்து” என்றிருந்தது.

ஊரவையினர் முறையாகக் கையெழுத்தை ஒத்துப் பார்த்து ஒலை சரியானதே என்ற முடிவை அறிவித்தனர். முடிவு என்ன? முதியவராகிய வேதியருக்கு நம்பியாரூரர் அடிமை செய்ய வேண்டும் என்பதேயாம்.

ஊரவையினர் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள வேதியரின் வீட்டு முகவரி முதலியனவற்றைக் கேட்டனர். வேதியர் “அறியீரோ” என்று கூறி முன்னே நடந்தார்.