பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இரண்டாவது ஐயம். “அடிமை ஒலை எப்போது பிறந்தது? எப்படிப் பிறந்தது? ஒலையில் வரலாறு கூறப் படவே இல்லை. ஒலை இயல்பாக எழுதப்பெற்றதா? அல்லது தயாரிக்கப்பெற்றதா? மூல ஓலையின் படி ஒன்று நம்பியாரூரரின் வீட்டில் இருக்க வேண்டுமல்லவா? அப்படி இருந்ததாகச் சேக்கிழார் கூறவில்லை; முதியவர் கூறவில்லை. ஏன்?” என்பது.

இறைவன் இந்த வரலாற்றின் மையக் கருத்தாகிய சாதி ஒழிப்பைப் பலரும் அறியத்தக்க வகையில், நாடக மரபில் உணர்த்த விரும்பியுள்ளான். சாதி வேற்றுமை அகற்றும் பணி எதிர்மறையாகவும் செய்யப்பெறுதல் வேண்டும்; உடன் பாட்டு முறையிலும் அணுகி செய்யப் பெறுதல் வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம்.

நம்பியாரூரருக்கு மரபு வழி நடைபெறவிருந்த திருமணத்தைத் தடைசெய்தது எதிர்மறை. ஒரே சாதி வழித் திருமணம் தடைசெய்யப் பெறுகிறது. இது முதல் முயற்சி. இன்னும்கூட இந்த முயற்சி பரவலாக மேற்கொள்ளப் பெற வில்லை. இதனைப் பலரும் அறியச் செய்ய நினைத்ததால் திருமண நிகழ்ச்சி வரை காத்திருந்து பலரும் அறியத் திருமணம் நிறுத்தப் பெற்றது. தமிழ்நாட்டு வரலாற்றில் இஃதொரு திருப்புமையும்.

நம்பியாரூரர், வேதியருக்கு அடிமையாக இருந்தால் அடிமைத் தொழில் செய்துவிட்டுப் போகிறார். அதற்காகத் திருமணத்தைத் தடை செய்வானேன்? “அடிமைக்குத் திருமண உரிமை இல்லை” என்ற மனுஸ்மிருதியின் தாக்கமா?

சென்ற நூற்றாண்டு வரை ஏன் இன்றும் பல இடங்களில் தமிழர் இல்லத் திருமணங்களில், திருமணத்தின் போது மணமகனுக்குப் பூணுல் அணிவித்துப் பார்ப்பனனாக்கிப் பின் திருமணம் செய்து வந்தனர்; செய்து