பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 திளைத்தாட வேண்டும்; அவர் செந்தமிழை மேலும் அனுபவிக்க வேண்டும் என்பது திருவுள்ளம்.

ஆதலால் விதிவிடங்கன் “பரவையார் சமாதானம் அடையவில்லை; மறுக்கிறாள்” என்ற செய்தியுடன் தம்பிரான் தோழரை அணுகுகிறார். நம்பியாரூரருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் தாங்கொணாத் துயரத்தைத் தந்தது.

திருவாருர் இறைவனை நோக்கி, “ஐயன்மீர்! பரவையாருடன் கூட்டுவிக்கத் தவறுவீராயின் உயிர் தரியேன்” என்றார். மீண்டும் திருவாரூர் இறைவன் துது போக உடன் பட்டார்.

வீதிவிடங்கன் தம் திருக்கோலத்துடன் பரவையார் மாளிகையை நண்ணினார். வீதிவிடங்கப் பெருமானின் திருக்கோலக் காட்சியில் ஈடுபட்ட பரவையார் விரைந்து சென்று வணங்கினார்.

பெருமான், “நம்பியாரூரன் நின்னையடைதல் வேண்டும்” என்றார். பரவையாரும் இசைந்தார். விதி விடங்கப் பெருமான் விரைந்து போந்து சுந்தரரை அணுகிப் பரவையாரின் உடன்பாட்டைத் தெரிவிக்கிறார்.

நம்பியாரூரர் பரவையாரின் மாளிகைக்குச் செல்லப் பரவையார் அன்புடன் வரவேற்றாள். தங்கள் பொருட்டு இறைவன் திருவாரூர்த் தெருவில் இருமுறை திருவடி நோக நடந்த கருணையை நினைத்து இருவரும் உருகினர். இந்த நிகழ்ச்சிகளைச் சுந்தரர் நினைத்து நினைத்து நெஞ்சுருகிப் பாடியுள்ளார்.

.....அடியேற்கு எளிவந்த
துதனைத் தன்னைத் தோழமை அருளித்
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை.....,

(7.68.8)