பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 இந்தச் சூழ்நிலையில் சுந்தரரின் வாழ்க்கைத் தேவைகள் வளர்ந்து விட்டமையை நாகைக் காரோணப் பதிகம் விளக்கிக் கூறுகிறது. இவற்றை ஈடு செய்யத் தக்க வகையில் சேர அரசராகிய சேரமான் பெருமாளுக்குத் தகுதி மிகுதியும் கூடிய நிலையில் அறிமுகப்படுத்தி நட்புரிமைப் படுத்துகிறார்.

நம்பியாரூரைப் பற்றிய அறிமுகம் கிடைத்தவுடனேயே அவர் சுந்தரரைக் காணத் திருவாரூருக்கு வந்துவிட்டார். சுந்தரரும் அவரை வரவேற்று மகிழ்ந்தார். நம்பியாரூரரும் சேரமான் பெருமாளும் புற்றிடங் கொண்டானை வணங்கி மகிழ்ந்தனர்.

சேரமான் பெருமாள் தாம் இயற்றிய மும்மணிக் கோவையை மொழிந்தார். தம்பிரான் தோழர் "சேரமான் தோழ"ருமானார்.

சேரமான் தோழரும் சேரமான் பெருமாளும் திருஆல வாயிலை வணங்க எழுந்தருளினர். இடையில் பல திருத்தலங்களை, திருப்புத்துரர் உள்பட வணங்கிக்கொண்டு ஆலவாயை நண்ணினர். அங்கு, பாண்டிய அரசன், பாண்டியனின் மகளை மணந்திருந்த சோழன், சேரமான் பெருமாள் ஆகிய மூவேந்தர்களுடன் நற்றமிழ் வேந்தராகிய சுந்தரர் ஆலவாயிலுறை அடிகளை வணங்கிப் போற்றினார்.

சேரமான் பெருமானுக்கு ஆலவாயவண்ணல் முன்பே அறிமுகம் திருமுகப்பாசுரத்தின் வாயிலாக! திருப்பரங் குன்றத்து இறைவன் முன் மூவேந்தருடன் வழிபட்ட முறையைச் சேரமான் தோழர் திருப்பதிகம் கூறுகிறது.’

அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று
அமரப் பெருமானை ஆருரர் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்து ஆறும் ஒர் நான்கும் ஒரொன்றினையும்