பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

381



காரணம் காட்டுகின்றார்; அக்காரணத்தை ஐய வினா வாக்குகின்றார், என்ன காரணம்?

திருமுருகன் பூண்டிஅயற்
செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள
ஒண்ணாமைக் கதுவாங்கிப்
பெருகருளால் தாங்கொடுக்கப்
பெறுவதற்கோ? அதுஅறியோம்,
(கழறிற்றறிவார் புராணம் 165)

என்பது பெரிய புராணம்.

தம்முடைய தோழனாகிய தம்பிரான் தோழருக்குப் பொருள் தாமே தரவேண்டும். மற்றவர் தரவும் கூடாது; இவர் பெறவும் கூடாது. மற்றவர் கொடுத்துப் பெற்றால் தம் நட்புரிமைக்கு இழுக்கு என்று சிவபெருமான் கருதியிருப்பார் போலும்! என்று சேக்கிழார் பாடுவது நினைந்து மகிழத் தக்கது.

இரண்டும் உடன் நிகழ்வது ஏன்?

அதன்பின், திருவாரூர் சென்றடைந்து சில நாள் தங்கியிருந்தார் நம்பியாரூரர்; மீண்டும் சேரமான் பெருமாளைக் காண வேணவாக் கொண்டு சேர நாட்டுக்குப் பயணமானார்; பயண வழியில் அவிநாசித் திருத்தலத்திற்கு எழுந்தருளுகின்றார்.

அவிநாசியில் அருகருகில் ஒரு வீட்டில் மங்கல முழங்கொலியும், மற்றொரு வீட்டில் அழு குரலும் கேட்கிறது. இந்த முரண்பட்ட நிலை சுந்தரருக்கு உவகையைத் தரவில்லை.