பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

385



வாழ்க்கை பொருளுடையது; அர்த்தமுடையது. கடவுள் வாழ்த்துப் பொருள் மட்டுமல்ல; வாழ்வுப் பொருள் என்ற நெறிமுறை உருவாகியது சுந்தரர் வரலாற்றின் மூலம்தான்! இதனால் தமிழ்நாடு தனது நாகரிகத்தை வளர்த்துக் கொண்டது.

சமஸ்கிருத மொழியே அருச்சனை மொழி என்ற நடைமுறையைச் சுந்தரர் வரலாறு மாற்றியது. “அருச்சனை பாட்டேயாகும்” என்று சொற்றமிழ்ப் பாடல்களை அருச்சனையாக்கித் தமிழருக்காகத் தொடங்கி வைத்ததே சிவபெருமான்தான்! முதல் தமிழருச்சனை செய்தவர் சுந்தரர்.

இன்று தமிழருச்சனை தமிழ் மக்களால் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பெற்றுள்ளது. ஆயினும் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை. தமிழ் மக்களுக்குத் தமிழார்வம் இல்லை! இஃது ஒரு தவக்குறைவே.

சைவ சமயம் சார்ந்த வாழ்க்கைக்குத் தாழ்வெனும் தன்மை இன்றியமையாதது. நம்பியாரூரர் தம்பிரான் தோழர்; அரச குடும்பத்தில் வளர்ந்தவர். யாராக இருந்தால் என்ன?

அடியார்களுக்கு வணங்கிய வாயினராதல் தவிர்க்க இயலாத கடமை என்பதைத் திருத்தொண்டத்தொகை விளக்குகிறது. அடியார்களிடம் வணக்கம் இன்றியமையாதது என்பதே திருத்தொண்டத்தொகையின் விழுமிய பொருள்.

இந்த உலகில் நிலவும் துன்பத்தை இயற்கை என்றும் நியதி என்றும் அனுபவிக்கும் கொள்கை தமிழருடையதன்று. இந்த உலகில் வாழ்க்கையை இன்புறு நலன்கள் நிறைந்த வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்பதே வாழ்க்கையின் குறிக்கோள்.

சங்ககாலக் கவிஞன் வினா எழுப்பி விடை காண்கிறான். ஒரு வீட்டில் அழுகுரல், பிறிதொரு வீட்டில் மகிழ்ச்சி எதனால்? ஏன்? கடவுளின் படைப்பு என்பதைக் கவிஞன் கு.இ.vii.25.