பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

391


இரண்டாவது மதுரையில் பாண்டிய அரசன் சமணர்களைக் கழுவேற்றியபொழுது அந்த வன்செயலைத் தடுக்காமை.

திருநாவுக்கரசர் செய்த குற்றங்கள் சமண சமயத்திற்குப் போய் வந்தது; திருஞானசம்பந்தர் மதுரை செல்லத் துணிந்த பொழுது திருவருளை நம்பாது நாளையும் கோளையும் காரணம் காட்டித் தடுக்க முயன்றது; திருமறைக்காட்டில் மறைக்கதவம் திறக்கப் பாடியபொழுது, இறைவன் தமிழ் கேட்கும் இச்சையால் காந்தாழ்த்தியதை உணராது அயர்ந்தது ஆகியன.

திருநாளைப் போவார் இறைவன் திருவருள் கைவரப் பெற்றும் திருக்கோயிலுக்குள் நுழையாமல் தாழ்வு மனப் பான்மையுடன் தயங்கியது. மூர்க்கர் சூதாடியது. சாக்கியர் இறைவன்மீது கல்லெறிந்தது. சிலந்தி தன் வாய் எச்சிலால் இறைவனுக்குப் பந்தல் அமைத்தது; மேனியில் வீழ்ந்தது. கண்ணப்பர் மரபு மீறிய நிலையில் பூசனை செய்தது. அதாவது வாயில் நீர்கொணர்ந்து உமிழ்ந்து திருமஞ்சனம் செய்தது. இறைச்சியைத் திருவமுதாகப் படைத்தது; அதுவும் சுவைத்துப் பார்த்த இறைச்சியைப் படைத்தது. இறைவன் திருமுடியில் செருப்பணிந்த காலைத் துக்கி வைத்தது ஆகியன.

கணம்புல்லர் தலைமயிரைக் கொண்டு திருவிளக்கு எரித்தது. இவையெல்லாம் தூய மனத்துடன் செய்யப் பெற்றவை; குற்றமில்லாதவை.

எனினும் சுந்தரருக்குத் தன் குற்றத்தை இறைவன் மன்னிக்கவேண்டும் என்பது முறையீடு! அதற்காக முன்பே குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும் போது என் குற்றம் மட்டும் மன்னிக்கப்படக் கூடாதா? என்று கேட்கிறார்.