பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

23


இளைஞன் பிணமாகக் கிடக்கின்றான்! அந்தப் பிணத்தின் அருகில் ஒரு கன்னிப் பெண் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். அந்தக் கன்னிப்பெண் அந்த இளைஞனைக் காதலித்து மணம் செய்து கொள்ள விரும்பிப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும் உடன் போக்கில் வந்துவிட்டனர். திருமருகல் திருக்கோயிலில் திருமணம் செய்து கொள்வதாகத் திட்டம். திருமருகல் வரும்பொழுது நள்ளிரவாகிவிட்டது. திருக்கோயில் நடை சார்த்தப் பெற்று விட்டதால் அந்த மடத்தில் தங்கி மறுநாள் காலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் படுத்துத் தூங்கினர். அவர்களுடைய தீயூழ், அந்த இளைஞனை ஒரு நச்சுப் பாம்பு கடித்துவிட்டது. நஞ்சினால் அந்த இளைஞன் அவளின் காதலன் இறந்துபோனான். பொழுது புலர்ந்தது. பெண், தான் மணக்க இருந்த காதலன் இறந்துகிடப்பதைக் கண்டு ஒன்றும் செய்வதறியாமல் அழுகிறாள். உடன் போக்கில் வந்த காதலர்களேயாயினும் தனியே படுத்துறங்கினாலும் உடலுறவு ஏற்படவில்லை. அவ்வளவு ஒழுக்கக் கோட்பாடுகள் அன்றைய தமிழரிடம் இருந்தன. “பாம்புகூட அவனைத் தீண்டும் பேறு பெற்றது. ஆனால் அவள் அவனைத் தீண்டி அழமுடியவில்லை” என்று சேக்கிழார் கூறுகிறார்.

‘வாளரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள்’ என்பது சேக்கிழார் வாக்கு. முறையாகத் திருமணம் ஆகாத நிலையில் ஓர் ஆணின் உடலைப் பெண்ணோ, பெண்ணின் உடலை ஆணோ தொடக்கூடாது என்ற மர்பு, தமிழ் மரபு; தமிழர் பண்பாடு. கன்னிப் பெண்ணின் துன்பமறிந்த திருஞான சம்பந்தர் நெஞ்சு நெக்குருகித் திருமருகல் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை வேண்டி,

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்