பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தத்துவச் செறிவுடையது. நஞ்சனைய துன்பத்தை ஏற்றுக்கொள்; தொழிற்படு; மற்றவர்களை வாழவைத்திடு; அதுவே வாழ்க்கையின் தவம் என்பது இந்த வரலாறு புகட்டும் வாழ்க்கைத் தத்துவம். இந்தத் தத்துவம் உண்மையிற் செயற்படும் பொழுதே கடவுளியல் காட்சியளிக்கும். அதனாலேயே பெருமான் விடைக் கொடி உயர்த்தியிருக்கிறான். கொடி என்பது கொள்கையின் சின்னம், இறைவன் விடைக்கொடி உயர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன? பொருள் என்ன? உயிர்வர்க்கத்திலேயே கடுமையாக உழைக்கும் இயல்பினது விடையாகிய எருது. உழைத்த பயனையெல்லாம் மனித உலகம் உண்டு மகிழ வழங்கி விடுகிறது அது. ஆனால், அந்த எருதோ வெறும் வைக்கோலைத் தின்று உயிர் வாழ்கிறது. அங்ஙனம், உயிர்வாழ்தலும் கூட மீண்டும் உழைத்து உலகத்தை வாழ்விக்கவேதான்! இதுவே இறையியற் கொள்கை; கடவுளியல்காட்டும் தவம். இத்தகு வாழ்க்கை முறையை மேற்கொண்ட அனைவரும் சமயநெறியாளர்கள். அவர்கள் நெஞ்சில் இறைவன் கோயில் கொள்வான். அதுவே, விடையூர்தல் தத்துவத்தின் விளக்கம். இத்தகு வாழ்க்கைமுறை என்றைக்குத் தனி மனித வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் மேம்பட்டு விளங்குகிறதோ அன்றே கடவுளியல் உலகத்தவரால் ஒப்புக்கொள்ளப் பெறும். வேறு எந்தவகையாலும் முறையாலும் உலகம் ஒப்புக்கொள்ளாது. இதனைத் திருஞான சம்பந்தர்.

உண்ணற் கரிய நஞ்சையுண் டொருதோழந் தேவர்
விண்ணிற் பொலிய அமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்

என்று பாடிப் பரவிப் போற்றுகின்றார்.