பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6
அறிவொடு வழிபடுக!

சமய வாழ்க்கை என்பது எளியதொன்றன்று. கடவுளை நம்புதலும் அவனை வழிபடுதலும் இன்று ஒரு சடங்காகவே மாறிவிட்டது. வழிபாட்டுக்கும் அறிவுக்கும் இன்றைக்குப் போதிய தொடர்பில்லை. ஏதோ, அது உயிர்ப்பற்ற சடங்காக இருக்கிறதே தவிர அறிவும் இல்லை; அனுபவமும் இல்லை. விஞ்ஞானியாக இருந்து விஞ்ஞான சோதனைகள் செய்வதை இன்று அருமையானதென்று பலர் கருதுகிறார்கள். அறிவின் பாற்பட்டதாகவும் நம்புகிறார்கள். ஆனால், சமயத்தை - கடவுள் வழிபாட்டை அங்ஙனம் கருதுவதில்லை. கடவுள் வழிபாட்டுக்குச் சார்பாக நிற்பவர்களும்கூடப் பெரும்பாலோர் பொய்ம்மையே செய்கிறார்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சி என்பது பெரும்பாலும் அறிவின்மையத்திலேயே செய்யப்படுவதால் அது உடனடியாகப் பயனையும் தருகிறது. கடவுள் வழிபாடு அங்ஙனம் செய்யப் பெறாமையால் பலருக்கு அந்த அறிவில் ஐயம் ஏற்படுகிறது. நமது முன்னோர், கடவுளை வழிபடுவதற்கும் கூடப் பேரறிவு வேண்டும் என்று நம்பினர். ஏன்? நமது முன்னோர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு வழிகாட்டியவர்கள் சிந்தனையில் வல்லவர்களாக இருந்து