பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்திமை யென்னும் வித்து

35


விதையாகப் போட்டுவிட்டால் என்ன பயன்? இதயத்தின் ஆழத்தில் பத்திமை யென்னும் விதையை விதைக்க வேண்டும். இங்ஙனம் பத்திமையாகிய வித்தை விதைத்த பிறகு, உலகப் பொது நூற் புலவர் திருவள்ளுவர் கூறிய செம்பொருளை - மெய்ப்பொருளை நிலையான உணர்வில் நினைவு கூர்தல் வேண்டும். தனக்குவமையில்லாத் தலைவனாக - சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனியம்மானாக விளங்கும் சிவபரம் பொருளை நீள நினைந்தும் - நினையாமல் நினைந்தும் வாழ்த்தி வணங்குதல் வேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக் கொண்டால் இறைவன் வாழ்க்கையை மட்டும் அளிப்பதில்லை. சிவபெருமான் தனக் குரியனவாகப் பெற்றிருக்கும் நலன்களையெல்லாம் உயிர்க்கு வழங்கி வாழ்வித்தருளுவான். சீவன், சிவமாதலிற் சிறந்த பேறு வேறு எது? இந்த இனிய பேற்றினையுடைய பொறிகள் வழி செல்லற்க; பொறிகளை அரன் பணியில் ஆற்றுப்படுத்துக! மூவாத் துன்பத்திற்கு ஆளாக்கும் முக் குணத்தை எண் குணத்தான் தாளை வணங்குதலில் ஈடுபடுத்துக! சித்தத்தைச் சிவன்பால் வைத்து ஒன்றுக! ஒரு நெறிய மனம் பெறுக! நீள நினைக்கும் நெஞ்சில் பத்திமை என்ற விதையை விதைத்திடுக! இன்ப அன்பை எளிதில் பெறலாம்.

பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
பாலேபோகா மேகாவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.

- திருஞானசம்பந்தர்