பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5
புனித நெறி

வாழ்க்கை, அறிவுடையது; பொருளுடையது; இலட்சியங்களுடையது; நெறிகளுடையது என்பது திருஞானசம்பந்தர் கொள்கை. வாழ்க்கை, துன்பத் தொடக்குண்டு கிடக்கிறது. இந்தத் துன்பத் தொடக்கிலிருந்து விலகி, இன்பியல் வாழ்க்கைக்கு மனிதன் செல்ல வேண்டும். அங்ஙனம் துன்பத்தை இன்பமாக மாற்றியமைக்க வேண்டுமானால், தெளிவான அறிவு தேவை. தெளிவான அறிவும் உணர்வும் இன்றி எந்த முயற்சியெடுத்தாலும் கைகூடாது; பயனும் கிடைக்காது.

மனிதனுக்கு அறியாமையை விடக் கொடிய பகை வேறு இல்லை. மயக்கத்தைவிடத் தீமை தருவது வேறு எதுவும் இல்லை. அதுவும், அறியாமையை அறிவு என்று கருதி - நம்பி மயங்கும் மயக்கம் மிகவும் கொடுமையானது. இன்றைய சமுதாயத்தில் அறியாமையை அறிவு என்று நம்பி தன் முனைப்புடன் தலை தடுமாறித் திரிபவர்கள் பலர். அவர்களின் பேதைமை இரங்கத் தக்கது. எது போல? நல்ல வெட்டவெளியில் வெய்யில் எரிக்கும்பொழுது தொலைவில் நின்று பார்த்தால் தண்ணீர் அலைகள் பாய்ந்து செல்வது போல் ஒரு காட்சி தெரியும். அதனை இலக்கிய நூலார்,