பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்திமையின் பண்பாடு

43


அழிக்கின்றன. இங்ஙனம் சுடும் சொற்கள் பேசுவோர், நிறையத் திருநீறு பூசியவர்களிலும் இருக்கிறார்கள். அக்கு மணிகளை எண்ணில் பலவாக அணிந்தவர்களிலும் இருக்கிறார்கள். சொற்கள் ஈரக் கசிவுடையனவாக இருக்கவேண்டும் என்பது பற்றியே போலும், சொல்லை வழங்கும் நாவினைச் சுற்றி ஈரப்பசை எப்பொழுதும் இருக்க உமிழ் நீர்ச் சுரப்பிகளை இயற்கை அமைத்தது. சிலர் வாய் வறண்டும் கிடக்கும். பாவம் ! ஐயன்மீர்! வெப்பம் நிறைந்த சொற்களைக் கூறாதீர்! அவை ஒரு பொழுதும் பயன் தரா. பத்திமைக்கு வெப்பச் சொற்கள் பகை. பரமன் ஏறெடுத்தும் பாரான். பத்திமை வாழ்வு வேண்டுமாயின் சுடும் சொற்களைத் தவிர்மின்!

மனித வாழ்க்கை செயல்களை உயிர்ப்பாகக் கொண்டது. செயற்படா உலகம் செம்மை நெறியிற் சேர முடியாது. தொழிற்படா உலகம் தொல்லை இரும்பிறவிக் கடலைக் கடத்தல் முடியாது. செயற்படுக! செயற்படுக! ஆனால் காமத்தோடு செய்யற்க! காம உணர்ச்சி காரியத்தில் நாட்டங் கொடுக்காது. பயன்மீதே நாட்டங் காட்டும். ஒருத்தி உயிரை நேசிக்காது-காதலித்து அன்பு காட்டாது - அவளை வளர்க்காது - அவளிடத்தில் நலங்காண முடியாது. உடலின்பம் ஒன்றையே கருதிப் பெண்டாளுதல் காமம். இத்தகு காமம் இன்பத்தையும் வழங்காது. மாறாகத் துன்பத்தைத் தரும். பொருள், மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உண்பித்தும், உண்டும் மகிழப் பொருள் தேவை. இதற்குப் பொருள் தேடாது, ‘பொருளாளனா’கப் பொருள் தேடுதல் காமமாகும். நட்பு, தோழமை உலகத்தில் மிக உயர்ந்தது. ‘அது கிடைக்கும் இது கிடைக்கும்’ என்று நட்பு பூணுதல், நட்பன்று; காமம். காமம் என்பது பயனின்றி இயங்கும் ஓர் உணர்ச்சி. அது தன்னலத்தைச் சுற்றியே வட்டமிடும். மற்றவர்களைப் பற்றிக் காம உணர்வுடை