பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்திமையின் பண்பாடு

41


ஆசாரங்களே மிஞ்சி வளர்கின்றன. சத்தான - சாரமான வாழ்க்கையைக் காணோம். ஐயகோ! இதனினும் கொடுமை ஒன்றுண்டோ? திருஞானசம்பந்தர் பத்திமை வாழ்க்கையின் இலக்கணத்தை வடித்துத் தந்துள்ளார்.

இன்று, எங்கும் பரபரப்பு! எதிலும் பரபரப்பு! ஆண்டவன் முன்னே அருச்சனை நாமங்களைச் சொல்வதில் கூடப் பரபரப்பு! காரணம் பத்திமை நோக்கமல்ல. அருச்சனை தொழிலாகிவிட்டது. குறைந்த நேரத்தில் நிறையச் சம்பாதிக்க வேண்டுமென்றால், அருச்சனையைச் சாங்கோ பாங்கமாகச் செய்ய முடியுமா? அப்படியே அருச்சகர் செய்தாலும் செய்துகொள்ள வந்தவர் அடுத்த பேருந்தில் போகப் பரபரத்துக் கொண்டிருப்பார். ஒரு செய்தியினைக் கேட்டுக் கலந்து, ஆராய்ந்து பேசி முடிவெடுக்க மனமில்லை. பரபரப்பு! ‘இப்படிச் சொன்னாயாமே!’ அப்படிச் சொன்னாயாமே! என்ற ஆவேச உணர்ச்சி! தகுதியை வளர்த்துக் கொள்ளக் கொள்ள உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. உரிமை யுணர்வில் ஒரே பரபரப்பு! தகுதியைப் பற்றி மனம் எண்ணிக்கூடப் பார்க்க மறுக்கின்றது. செய்தித் தாள்களில் சில வரிகளே வருகின்றன. பேசியவர் கருத்துக்கும் செய்திக்கும் உறவிருக்காது; உடன்பாடு இருக்காது. செய்தி தந்தவர் முன்னே குறைத்துப் பின்னே சிதைத்துத் தமது தொழிலுக்குரிய பாணியில் செய்தி தந்திருப்பார். “கள் குடிக்கலாம் என்று வள்ளுவர் கூறியதாக அடிகளார் கூறுகிறார்.” இந்தப் பொய்ச் செய்தியில் அரசியல் ஆர்வமுடையவர்களுக்கு - அடிகளாரைப் பிடிக்காதவர்களுக்கு உடனே பரபரப்பு! உண்மை கேட்டெழுத நேரமில்லை. ஆனால் ஊரெல்லாம் பேசநேரமுண்டு. நிறை தவறிய அரசியலுக்குப் பரபரப்பு! இப்படி எத்தனையோ வகையில் பரபப்பு! பரபரப்புடையவர் பண்பாளராக முடியாது. பத்திமைக்கும் பரபரப்புக்கும் எப்பொழுதும் பகை. “பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்.” என்றார்