பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரு வேளை உண்பது துறவென்றால் அது தானும் உண்ணாதார் பலரிருக்கிறார்கள். அவர்களைத் துறவியாக்கி விடலாமா? ஆதலால் துறந்த பொருட்களைக் கொண்டு துறவியை நிர்ணயிக்க முடியாது. துறக்கக்கூடாததை அவன் துறக்காமல் இருக்கிறானா? திருஞானசம்பந்தர் உண்மைத் துறவு நிலையை விளக்குகின்றார். நீ துறவாதிருந்தால் துறவியாவாய் என்கிறார். எதைத் துறக்கக்கூடாது? இறைவன் திருநாமத்தை நெஞ்சு துறக்கக்கூடாது; மறக்கக்கூடாது; ஏத்தி வழிபடத் தவறக்கூடாது; இறைவன் திருநாமத்தை மறவாது நினைப்பற நினைந்து ஏத்தி வாழ்தலின் மூலமே துறவியாவாய் என்கிறார், அதுவே துறவுக்கு இலக்கணம் என்பதைத் ‘துறவியாகுமே’ என்று வலியுறுத்துகிறார்.

பெளத்தத் துறவிகள் கடவுளை மறந்தனர். சமணத் துறவிகள் நோன்பே கடவுளெனக் கொண்டனர். இன்றையத் துறவிகளில் சிலர், கடவுளை மறந்து சாதியே அனைத்தும் என்று சாதிவெறி பிடித்து அலைகின்றனர். சிலர் - உருத்திராக்கம் அதிகமாக அணிபவர்கள் - கடவுளை மறந்து காசுகளை எண்ணுகின்றனர். கடவுட் கோயில் நமக்கு வேண்டாம். காணிகளே வேண்டும் என்று சொல்லிக் கோயிலைப் பாழடித்து விட்டுக் காணிகளை வைத்துக் களிப்புறுகின்றனர். இப்படிப்பட்ட ‘துறவிகள்’ நம்முடைய தலைமுறையில் இல்லையா? என்ன? தில்லைக்குச் சென்று அங்குள்ளோரைக் கேட்டால் விடை கிடைக்கும். உடை துறவுக் கோலந்தான்! வாழும் வகை துறவு போலத்தான் தெரிகிறது! ஆனாலும் துறவன்று! கனியின் தோல் பழுத்து பின் உட்புறம் பழுப்பதில்லை. அகத்திற் கனிந்த, கனிவே தோலையும் பற்றுகிறது. சுமைமிக்க கனிவு புறத்திலிருந்து அகத்தே செல்வதன்று. புறம் வேண்டுமானால் வாயிலாக இருக்கலாம். முதற்கனிவு கனியின் உட்பகுதியேயாகும். கனியின் உட்புறம் கனியாமல் தோல் மட்டும் கனிநிறம் காட்டினால் அது கனியல்ல, வெம்பல்! துறவிலும் உள்ளம்