பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10
ஈதலுக்குக் காலம் ஏது?'

தமிழர்நெறி வழங்கும் நெறியே! வாங்கும் நெறியன்று.

“நல்லாறு எனினும் கொளல் தீது, மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” என்று வள்ளுவம் பேசும். ஒளவைபாட்டி “இட்டார் பெரியோர்” என்றே கூறினார். “தம்மை மாறியும் அறம் புரிவது இந்நாடு” என்றார் பெரும்பற்றப்புலியூர் நம்பி. ஆனால் ஆரிய மரபு கொடுப்பதல்ல; கொள்ளுவதேயாகும். அவர்கள் கொள்ளுவதன் மூலமே பெரும் பேறு எய்துகின்றனர். மனித இயலுக்கு மாறான அறமாகும் இது. கொடுப்பதிலேதான் உயிர். அன்பைப் பெறுகிறது. இன்பத்தை அடைந்து அனுபவிக்கிறது. உலகின் எல்லா உயிர் இனங்களுமே கொடுப்பதில் தான் மகிழ்ச்சியடைகின்றன. செடிகள், கொடிகள், மரங்கள் மனித குலத்திற்கு வழங்கும் கொடை அம்மம்ம, எவ்வளவு அற்புதமானவை! அதனாலன்றோ, வகை வகையாய் நிற்கும் செடி, கொடி மரங்கள் வையகத்திற்கு அன்பு செய்கின்றன என்று பாரதி பாடினான். கொடுத்தலினும் கொள்வது ஒருவகைத் தகுதிக் குறைவே. தமிழன் இத்தகு கொடை வளத்தை உயிரெனப் போற்றுபவன். தமிழன் பொருளீட்டுவான். ஏன்? வாழவா? இல்லை; வாழ்விக்கவே!