உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/திருக்குறளும்-பெண்ணியமும்

விக்கிமூலம் இலிருந்து

95. திருக்குறளும்-பெண்ணியமும்

இனிய செல்வ, அண்மைக் காலமாக, திருக்குறள் பெண்ணியத்தைக் கீழ்மைப் படுத்தும் நூல் என்ற கருத்து, விவாதமேடை ஏறி இருக்கிறது. இனிய செல்வ, சமூகப் பழக்க வழக்கங்கள் காலத்திற்குக் காலம் மாறும் இயல்பின. ஒரு காலத்தில் தோன்றும் நூல்கள் அந்தக் காலச் சமூகப் பழக்கவழக்கங்களைக் களமாகக் கொண்டும், சில பழக்கங்கள்-வழக்கங்கள் மாற உந்து சக்தியாகவும் அமைவதுண்டு. அத்தகைய நூல்களில் திருக்குறள் ஒன்று.

இனிய செல்வ, திருக்குறள் முற்றாக மரபு வழி வந்த நூலும் அல்ல; முற்றிலும் புதுமை செய்த நூலும் அல்ல. திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மக்களின் சிந்தனை - செயல்திறன் நோக்கி நூலை இயற்றியுள்ளார். அவர் இயற்றிய நூலில் சிலதான் அவருடைய சொந்தக் கருத்து. பல அவர் காலத்தில் நாடு இருந்த நிலையை விளக்கியிருக்கிறார் என்று கொள்ளுதல் வேண்டும். இனிய செல்வ, திருக்குறள் அறத்துப்பால் தனி மனித ஒழுகலாறுகளையும் குடும்பப் பாங்கினையும் விளக்கிக் கூறுகிறது.

‘பெண் வழிச் சேறல்’, ‘வரைவின் மகளிர்’ அரசியலில் கூறப்படுகின்றன. இந்த அதிகாரங்களின் முறை வைப்பைப் பார்த்தால்தான் திருக்குறள் பெண்ணியத்தைப் பெருமை படுத்துகிறதா அல்லது இழிவு படுத்துகிறதா என்பதை உள்ளவாறு உணரமுடியும். ஆண்-பெண் ஒழுகலாறுகள் சமுதாயத்தில் நிலவும் ஆண்-பெண் விகிதாசாரத்தைப் பொருத்தது. மக்கள் தொகையில் ஆண்-பெண் விகிதாசாரம் சமநிலையில் இருந்தால் நல்லது. ஆனால் பல சமயங்களில் பெண்களின் விகிதம் கூடிவிடுகிறது. ஏன்? பல ஆண்கள் - பெண்ணியல் தன்மை தழுவி வாழும் ஆணகள், ஆண்களாக இன்றி வாழ்கின்றனர். அதுதான் காரணம்.

பாரதத்தில் வரும் ஐவருக்கு ஒருத்தியா என்று கேலி செய்வர். அது அந்தக் காலச் சமுதாய அமைப்பின் கட்டாயம். இனிய செல்வ, அரசியலில் ‘பெண் வழிச் சேறல்’ அதிகாரம் உள்ளது. அரசியல் மிகமிக உயர்ந்தது. அரசியலில் ஆட்சியாளருக்கு ஆலோசனை கூற மிக மிக உயர்ந்த மதிநுட்பமும் தேவை. அதனாலேயே தமிழருடைய அரசியல் முறையில் ஆள்வோருக்கு ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற அமைப்புக்கள் இருந்தன. திருவள்ளுவரும் அமைச்சியல் பற்றி நிறையவே பேசுகிறார்.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

(631)

வன்கண்குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

(632)

என்ற அமைச்சுப் பணியைப் பாராட்டுகின்றார். மேலும் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ வேண்டும் என்றும் கூறுகின்றார். இந்த அமைச்சுப் பணிக்கு ஆள்பவரின் மனைவி தகுதியுடையவளாக இருப்பின் அவளுடைய ஆலோசனையைக் கேட்பதைத் திருக்குறள் மறுக்கவில்லை. மாறாக அவர் மனைவி-காமத்திற்குரியளேயன்றி வேறு எந்தத் தகுதியும் இல்லை. அந்த நிலையில் அரசியல் பற்றிய ஆலோசனைகளை மனைவி சொல்லக்கேட்பது ஆள்பவருக்கு ஏற்றதல்ல என்ற கருத்தே பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து ‘வரைவின் மகளிர்’ அதிகாரம். பல்லாண்டுகளாகத் திருமணமாகாத பெண்கள் அக்காலத்தில் வாழ்ந்துள்ளனர். ஏன்? இன்றும் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் இரண்டாக இருக்கக்கூடும். ஒன்று பெண்கள் எண்ணிக்கையில் கூடுதலாதல் அல்லது வசதிக்குறைவாதல் ஆகலாம். வரைவின் மகளிர் புழக்கம் அதிகமான காலம் பெரும்பாலும் பிரபுத்துவ காலமாக இருக்கலாம். அதாவது தனியுடைமைச் சொத்துரிமை வந்துவிட்டது. தன்னுடைய குழந்தைக்கு அல்லாமல் வேறு ஒருவருக்குச் சொத்து போய்விடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகவே வரலாற்றுப் போக்கில் பலதாரத் திருமணம் நின்றது. பலதாரத் திருமணம் நின்றபிறகு தன் மனைவி புணர்ச்சிக்குத் தகுதியில்லாத காலங்களில் வேறுபெண்களைத் தேடும் நிலையில் வரைவின் மகளிர் குலம் தோன்றுகிறது. இனிய செல்வ, இந்த ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்க இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து கொள்ளும் உரிமையைத் தனது மக்களுக்கு வழங்கியது. சோவியத் ஒன்றியம் திருமணம் ஆகாத தாய்மார்கள் என்று அங்கீகாரம் செய்தது. இனிய செல்வ, நமது சமய சமுதாய நெறியில்தான் சாத்திர நெறிகளுக்கிடையே முரண்பாடுகள் தோன்றும்போது ஒழுக்க நிலையில் உறுதிப்பாட்டையும் காண்பதில்லை; திருத்தமும் காண்பதில்லை. நமது நாட்டில் வரைவின் மகளிர் பழிப்புக்கு ஆளாயினர். இந்தச் சூழ்நிலையை விளக்குவதுதான் வரைவின் மகளிர் அதிகாரம்.

இனிய செல்வ, இரண்டு அதிகாரங்களை வைத்துக் கொண்டு திருக்குறள் பெண்ணியத்தைப் பெருமைப் படுத்துவதில்லை என்று கூறுவது தவறு. இனிய செல்வ, குடும்ப இயலில் வாழ்க்கைத் துணை நலம் என்ற தனி அதிகாரமே அமைத்து, பெண்ணை ஓர் ஆணின் வாழ்க்கைக்குத் துணை என்று கூறுகிறார். இல்லை, இல்லை! வாழ்க்கைத் துணைநலம் என்றே கூறுகின்றார். தகுதி மிகுதியும் உடைய மனைவியை ஒருவன் பெற்றால் அவன் தன்னை இகழ்வார்முன் பீடு நடைநடக்க இயலும் என்று கூறுகின்றார். இனிய செல்வ, "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்று வினவுகின்ற திருவள்ளுவர் பெண்ணைப் பெருமைப்படுத்துகின்றார் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

இன்ப அன்பு

அடிகளார்

குறிப்பு: அடிகளார் தம்மறைவிற்கு முன்னர் மருத்துவ மனையில் இருந்தஞான்று ‘வள்ளுவர் வழி’க்கென்று வரைந்த இம்மடலே அடிகளாரின் இறுதி எழுத்துப் பணியும் ஆகியது. அந்தோ!

- ஆசிரியர்


தமிழ்மாமுனிவர்
தவத்திரு


குன்றக்குடி அடிகளார்
நூல்வரிசை


திருக்குறள்
இலக்கியம்
சமயம்
சமுதாயம்
பொது