பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பரிணாம வளர்ச்சி. கிராமப் பஞ்சாயத்துகள் கிராமக் குடியரசுகளாக விளங்குவது காலத்தின் கட்டாயம்.


9. [1]கூட்டுறவு இயக்கம்

கூட்டுறவு ஒரு வாழ்க்கைத் தத்துவம்; ஒரு வாழ்க்கை முறை. மனிதகுலத்தின் மேம்பாடு கூட்டுறவின் மூலம்தான் நிகழ முடியும். கூட்டுறவு மனித குலத்தை அகநிலையிலும் புறநிலையிலும் வளர்த்துச் செழுமைப்படுத்தி வளர்க்கும். இந்திய நாட்டில் சோசலிச சமுதாயத்தை-பொதுவுடைமைச் சமுதாயத்தைக் கூட்டுறவின் மூலமே அமைக்கமுடியும். இந்த மகத்தான சாதனையைக் கூட்டுறவின் மூலம் சாதிக்க வேண்டும் என்றால் கூட்டுறவுக் கல்வி, கூட்டுறவுச் சிந்தனையை நிறைய வளர்த்து நமது மக்களை இயல்பான கூட்டுறவாளர்களாக வாழப் பழக்கவேண்டும். ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது அறம். ஒழுக்கம், கடமை, தவிர்க்க இயலாதது என்ற கொள்கையை மக்கள் தங்களுடைய வாழ்க்கையின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளும்படி செய்யவேண்டும்.

ஒருவருக்கும் மற்றொருவருக்குமிடையில் மாறுபாடுகள் முரண்பாடுகள் தோன்றும். இதுவும் இயற்கை மானிடப் படைப்பு ஒரே அச்சு வார்ப்பல்ல, அச்சுவார்ப்பாக இருந்தால் சுவையில்லை, உயிர்ப்புமில்லை. ஆயினும் மாறுபாடுகளை முரண்பாடுகளைப் பகையாக்கி வளர்த்து வாழ்க்கையைப் பாழடிக்கக்கூடாது. மாறுபாடுகளையும் முரண்பாடுகளையும் அலட்சியப்படுத்தி உரியவர்களை ஒதுக்கி அல்லது ஒதுங்கி வாழ்தலும் சமுதாயக் கேடேயாகும். ஆதலால் மாறுபாடுகளையும் முரண்பாடுகளையும் திறந்த மனத்துடன், பரந்த மனப்பான்மையுடன் ஆராய்ந்து ஆக்க


  1. கடவுளை போற்று! மனிதனை நினை!