பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



3

கோவிந்தபுரத்தில் அடிக்கடி மழை பெய்வதில்லை. அதனால் ஆண்டில் பலமாதங்களில் கொடிய வறட்சியால் அவ்வூர் அல்லற்படும். குடிக்கத் தண்ணிர்கூடக் கிடைக்காது. இந்த ஊரில் வசித்த சுந்தரமூர்த்தி என்பவர் கற்ற அறிஞர்; உடல்நல விதியின்படி வாழ்பவர். இவர் மழை பெய்யும் பொழுது ஒரு பாத்திரத்தில் மழைத் தண்ணிரைப் பிடித்துக் கொள்வது வழக்கம். இந்தப் பழக்கத்தை அவர் தமது பிள்ளைகளிடம் கற்றுத் தந்ததில்லை; அவர்களும் பார்த்ததில்லை. சுந்தரமூர்த்தி இறந்து போனார்.

பின் சிலநாளில் மழைபெய்தது. சுந்தரமூர்த்தியின் மகன் இராமாமிர்தம் ஓடிப் போய் ஒரு பாத்திரத்தை வைத்தார், தண்ணிர் பிடிக்கும் நோக்கத்துடன்! மழை நின்ற பிறகு போய்ப் பார்த்தார்! பாத்திரத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை; என்ன காரணம்: மழை பெய்தது உண்மை! நீர்த்திவலைகள் வீழ்ந்தது உண்மை பாத்திரத்தை வைத்தது உண்மை! தண்ணிர் வேண்டும் ஆசை இருப்பது உண்மை பின் என்ன நடந்தது? இராமாமிர்தம் பாத்திரத்தைத் திறந்து வானோக்கியதாக வைக்காமல் கவிழ்த்து வைத்து விட்டார். அதனால் தண்ணிர் கொள்ளவில்லை!

அதுபோல இதயத்தில் இறையருளைத் தாங்குதல் வேண்டும். இதயத்தினை மூடி வைத்து விட்டு ஆயிரம் ஆயிரம் சடங்குகள் செய்தும் இதயந் திறக்காது போனால் இறையருளை வாங்க இயலாது; பயனற்ற வாழ்க்கையாகப் போகும்.

இதயத்தைத் திறவுங்கள்!
இறையருளைத் தேக்குங்கள்!