பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

15


'தீய பரப்புச்சொல் சான்றார்வாய்த் தோன்றா'

- பழமொழி:95:3

புறங்கூறுதல், பிறன்பழி கூறுதல், தூற்றுதல், குற்றங்கூறுதல், குறளை கூறுதல், புறம் பறைதல், கோள் முட்டுதல், கொத்தறை சொல்லுதல், அவதூறு கூறுதல் எல்லாம் ஒருசெயல் குறித்த சொற்கள் ஆயின.

இதனைத் தொடர்புற்றவர் முன்னிலையிலேயே கூறுதற்கு அஞ்சியோ, அல்லது அவரைப்பற்றிப் பிறரிடம் கூறி, அவரை இழிவுபடுத்த - பழிப்படுத்த - குற்றப்படுத்த - வேண்டும் என்னும் அறமல்லாத கொடிய நோக்கத்தாலோ நிகழ்வதாயிற்று. இதில் ஊதியம் கருதுதலும் உண்டு.

ஒருவரைப் பற்றிய குற்றங்களை அல்லது குறைகளை அல்லது தவறுகளை அவரிடமே சுட்டிக் கூறுதல், 'இடித்துக் கூறுதல்’ எனப்படும். இது அவரைத் திருத்தும் நோக்கத்துடன் கூறுதல் ஆகும். இந்நிலை உண்மை நண்பர்க்கு உரியது. இதனை ஆசிரியர்,

'நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு’ - 784

என்று பெருமைக்குரியதாகக் கூறுவர்.

அவ்வாறு இடித்தும், கடிந்தும், அவர் முன்னிலையில் நின்றே அவரிடம் கூறுதல், அவர் அக்குற்றத்தைத் திருத்திக் கொள்ளல் வேண்டும் எனும் நல்லெண்ணத்தாலும், நண்பர்மேல் கொண்ட அக்கறையினாலும் நிகழ்வது ஆகும். இதனை ஆசிரியர்,

‘கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்கச் சொல்’ - 184

'அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்’ - 795

என்று கூறி விளக்குவர்.

இதற்கு மாறாக, நட்புப்போல், மனைக்கண் மிக நெருங்கிப் பழகியிருந்து, அவர்களைப் பற்றிய செய்திகளை யெல்லாம் தெரிந்து கொண்டு, அவற்றைப் போய் மற்றவர்களிடம் பழித்துத் துற்றுவார் தொடர்பை எந்த வகையிலும் ஒருவர் தவிர்க்க வேண்டும் என்று கூறுவார், ஆசிரியர்.

‘எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு’ - 820

இக் குற்றத்தை ஆசிரியர் 'கயமை' என்னும் சொல்லால் இழித்துக் கூறுவர். அவ்வாறு நடப்பவரைக் 'கயவர்' என்று சுட்டுவர்.