பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

165


வேற்றுநா டாகா, தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல் - பழமொழி:55

(ஆற்றுணா - ஆறு கண்டு உண்ணும் உணவு - கட்டுச் சோறு).

கழக எழு வள்ளல்களும் கொடைமடமும்:

கழகக் காலத் தமிழ வரசர்களுள் மிகப் பெரும்பாலார் ஈகையறம் செறிந்த உள்ளத்தோரே. அவருள் மிகப்பலர் அறிஞர்களை, இரவலர்களை ஆதரித்த வள்ளண்மை உடையவர்களே. இருப்பினும் அவர்கள், எழுவர் மிகவும் சிறப்புறப் பேசப் பெற்றுளர். புலவர்கள் பலரும் அவர்களை மிகவும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அவர்கள் கடையெழு வள்ளல்கள் எனப் பெற்றனர். அவர்கள் அவ்வாறு கூறப்பெறுவதால் தலையெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள், என்று எண்ணப்பெறும் வரிசையரும் இருந்துள்ளமை விளங்கும். அவரெல்லாரையும் இங்கெடுத்துக் கூறுதல் மிகையாகலானும், அவருள்ளும் ஒரு சிலரை இந்நூலுள் தேவையிடத்து விளக்கலாம் ஆகலானும், கழக இலக்கியங்களுள் மிகுத்துக் கூறப்பெற்ற கடையெழு வள்ளல்கள் எனப்பெறும் கழக எழுவள்ளல்கள் பற்றிய பாக்களை மட்டும் அவர்தம் ஈகைச் சிறப்பு விளங்க எடுத்துக் கூறுவது பொருத்தமாம் என்க.

முதற்கண் கழக எழுவள்ளலரையும் குறிப்பிட்டுப் புகழும் இரு பாடல்கள் வருமாறு:

பறம்பிற் கோமான் பாரியும், பிறங்குமிசைக்
கொல்லி யாண்ட வல்வில் ஒரியும்,
காரி யூர்ந்து பேரமர்க் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும்,
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்,
...................................................................................
பெருங்கல் நாடன் பேகனும், திருந்துமொழி
மோசி பாடிய ஆயும், ஆர்வ முற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஒட்டிய நள்ளியும் - எனவாங்கு எழுவர் - புறம்:153:4-17

“வானம் வாய்த்த வனமலைக் கவாஅற்
கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய