உள்ளடக்கத்துக்குச் செல்

பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/பாவேந்தர் பாரதிதாசன்

விக்கிமூலம் இலிருந்து
பாவேந்தர் பாரதிதாசன்


பாட்டுக்கு வேந்தர்
பாவேந்தர் - அவர்
பாரதிதாசன்
எனும் வேந்தர்!- தம்பி

ஏட்டுக்கு ஏடு
எழில்கொழிக்கும் - அவர்
எழுத்துக்கு எழுத்து
தமிழ் மணக்கும்! (பாட்டுக்கு)

கூட்டுக்குள் ஆவி
தமிழ் என்றார் - அவர்
குரலுக்குக் குரலால்
நமை வென்றார்! - நம்

வீட்டுக்கு வீடு
அவர் பாடல் - பெரும்
வீதிக்கு வீதி
அவர் புகழாம்! (பாட்டுக்கு)

நரம்புக்கு நரம்பு
உணர்வேறும் - உயிர்
நாடிக்கு நாடி
தமிழ் ஊறும்!

கரம்புக்கு உழவாய்
மனம் உழுதார் - நல்ல
கழனிக்கு மழையாய்த்
தமிழ் பொழிந்தார்! (பாட்டுக்கு)

இருளுக்கு ஒளியாய்
அவர் திகழ்ந்தார் - நல்ல
இயற்கைக்கு உயிராய்
எழில் கொடுத்தார்!

மருளுக்கு மருந்தாய்த்
தமிழ் விளைத்தார் - தம்பி!
மடமைக்கு எதிராய்ப்
போர் தொடுத்தார் (பாட்டுக்கு)