பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அ-218 ஒப்புரவறிதல் 22



உக௭. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் - 217

பொருள்கோள் முறை:

செல்வம் பெருந்தகையான் கண்படின்
மருந்துஆகித் தப்பா மரத்து அற்று ஆல்.

பொழிப்புரை: செல்வம், மக்கள் நலம் கருதும் பொதுமையுணர்வென்னும் பெருங்குணம் நிறைந்த ஒருவனிடம் வந்துசேரின், அது முழுமையும் மருந்துக்கு ஆகும் மரம் போல் என்றும் எவர்க்கும் தவறாமல் பயன்தரத் தக்கதாம்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) செல்வம் பெருந்தகையான் கண் படின் : செல்வம் மக்கள் நலம் கருதும் பொதுமையுணர்வென்னும் பெருங்குணம் நிறைந்த ஒருவனிடம் வந்து சேரின்.

பெருந்தகை : பெருந்தன்மை, மேலாந்தன்மை, பெருங்குணம் உடைமை.

தகை - தகுதிக்கூறு, தகுதன்மை.

2) மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று : அது முழுமையும் மருந்துக்கு ஆகும் மரம்போல் என்றும் எவர்க்கும் தவறாமல் பயன்தரத் தக்கதாம்.

மருந்து ஆகி : முழுமையும் மருந்துக்கு உதவுதல் ஆகி.

- முழுமையும் என்றது, மருந்து மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், கனி, கொட்டை, காற்று, நிழல் முதலிய அனைத்தும் மருந்துக்கு பயன்படுவனவாதல் பற்றி,

தப்பா மரம்: பயன்படுவதில் எவர்க்கும் என்றும் தப்பாத மரம். அனைவர்க்கும் பாதுகாப்பும் உயிர்க்காப்பும் தரும் வள்ளல் தன்மையை இவ்வாறு கூறினார்.

- உடல் நோய்க்கு எவ்வாறு மருந்து உதவுகிறதோ, அவ்வாறு பசிநோய்க்கும், வறுமை நோய்க்கும், உணவும் உறுதுணை தந்து உதவுதல் தன்மை.

ஒப்புரவாண்மை பேணி அனைவர்க்கும் உதவும் பொதுமை உணர்வு கொண்ட பெருந்தகையாளனை மருந்து மரம் எவ்வாறு உடற்பிணி தீர்க்குமோ, அவ்வாறு பசிப்பிணியும் வறுமைப் பிணியும் தீர்க்கும் மருத்துவனாகக் கூறுதல் புலவர் மரபு என்க.

- பசியை ஒரு நோய் - ஒரு பிணி - என்றும், அதை நீக்கும்