இளையர் அறிவியல் களஞ்சியம்/மண்
மண் : (Soil) பூமி மட்டும் மண்ணால் மூடப்படாமல் இருந்திருந்தால் மனிதன் என்றோ அழிந்து, இல்லாமலே போயிருப்பான் . மண் இல்லையென்றால் தாவர வளர்ச்சியில்லை. அதனால் உணவு உற்பத்தியில்லை. மனித இனமோ விலங்கினமோ பறவையினமோ உணவின்றி வாழ வாய்ப்பே இல்லை. எனவே, அனைத்துயிர்களும் வாழ மண் அடிப்படைத் தேவையாக அமைந்துள்ளது.
தாவரப் பயிர்கள் செழித்து வளர மிருதுவான மண் தேவை. இம் மண் பாறைத் தூள்களும் இறந்த உயிர்கள், மரம் செடி கொடிகள் முதலான தாவரங்கள், மடிந்த விலங்குகள் ஆகியன மக்குவதால் உண்டாகின்றன . காணப்படும் சிறு கற்கள் அல்லது பொடி மணல்கள் ஒரு காலத்தில் பெரும்பாறைப் பகுதிகளாக இருந்தவைகளாகும். உடைக்க முடியாத பாறைகள் என்று உலகில் எதுவும் இல்லை. பல வகைகளில் பாறைகள் தூளாகின்றன. பாறைகள் உடைந்து சிதற வெப்பம் ஒரு காரணமாகும். அதிக வெப்பமும் அதிகக் குளிர்ச்சியும் பாறைகளில் வெடிப்புகளை உண்டாக்க ஏதுவாகின்றன. அந்தப் பாறை வெடிப்புகளில் பறவைகள் மூலம் தாவர விதைகள் விழுந்து, அதன் மூலம் செடி முளைத்து மரமாகும்போது பாறைப் பிளவுகள் சிதறி சிறு துண்டுகளாகின்றன. இத்துண்டுகள் மழை நீரில் உருட்டிச் செல்லும்போது ஏற்படும் உராய்வினால் தேய்ந்து சிறு சிறு மணல்களாகவும் பின்பு மிகச் சிறிய துணுக்குகளாகவும் உருமாறுகின்றன. அழிந்த தாவரங்கள் விலங்குகளின் பாக்டீரியாக்களால் நன்கு மக்கி மண்ணோடு கலக்க மண் நல்ல வளமுடையதாக ஆகிறது.
மரம், செடி கொடிகள் இல்லாத பாறைப் பகுதிகளில் வளமான மண் இருப்பதில்லை. சிறு சிறு கற்களால் நிரம்பியுள்ள இப்பகுதி 'சரளை நிலம்’ என அழைக்கப்படும். இந் நிலத்தில் மழை நீரும் தங்குவதில்லை. கடினமான இப்பகுதியில் தாவரங்களும் முளைப்பதில்லை.
மணல் பகுதிகளில் தாவரங்கள் தேவையான நீரைப் பெற முடிவதில்லை. தாவரங்களின் வேர்கள் இறுக்கமான பிடிப்பைப் பெற முடிவதில்லை. எனவே, இதுவும் விளைச்சலுக்கு ஏற்ற மண்ணாக அமைவதில்லை. இன்னும் சில இடங்களில் களிமண் பூமியாக அமைந்திருக்கும் களிமண்ணில் மண் இறுக்கம் அதிகமாக இருப்பதால் நீரோ, காற்றோ மண்ணுக்குள் புக முடிவதில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாததால் மேலேயே தேங்கி நிற்க நேர்கின்றது. எனவே, எளிதில் வேர் இறங்காத இம்மண்ணும் விளைச்சலுக்கு உகந்ததாக இருப்பதில்லை.
விளைச்சலுக்கு ஏற்ற மண்ணாகக் கருதப்படுவது வண்டல் மண் (Loam) ஆகும். இஃது மூன்று பங்கு மணலும் இரண்டு பங்கு களிமண்ணும் கலந்ததாகும். அத்துடன் மக்கிய தாவரங்களும் விலங்குக் கழிவுகளும் இம்மண்ணை மேலும் வளமுடையதாக ஆக்குகின்றன. இதனால், இறுக்கம் குறைந்த ஒரளவு பொலபொலப்புடன் இருக்கும் இம் மண்ணுள் நீர் இறங்கித் தங்குவதும் காற்று புகுவதும் எளிதாகும். இதனால் மண்ணுள் வேர்கள் நன்கு பரவி, நிலைபெற்று, வேண்டிய உணவைப் பெற முடிவதால் தாவர வளர்ச்சி செழிப்பாக அமைகிறது.
கருநிறமுடைய மண் கரிசல் மண்ணாகும். இதில் மணல் குறைவாக இருந்தாலும் வண்டலும் களிமண்ணும் சற்று மிகுதியாக இருக்கும். இத்தகைய மண்பகுதி பருத்தி விளைச்சலுக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
தடித்த தாவர, விலங்குகளை நன்கு மக்கச் செய்து வளமுடையதாக மண்ணை ஆக்குவதில் பாக்டீரியாக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதே போன்று மண் புழுக்களும் மண்ணைக் குடைந்து கொண்டிருப்பதால் அக்குடைவுத் துளைகளின் வழியே காற்றும் நீரும் வேர்களைச் சென்றடைய ஏதுவாகிறது. எனவே தான். மண்புழுக்களை 'உழவனின் தோழன்’ என்று அழைக்கிறோம்.
சாதாரணமாக மண் அடுக்குகளை மூன்று வகையாகப் பகுப்பர். தாவரங்கள் வளர்கின்ற பகுதிக்கு அடியிலுள்ள மண், மேல் மண் (Top soil) ஆகும். இதுவே சத்துள்ள மண் பகுதியாகும். அதற்குக் கீழாக உள்ள மண் அடி மண் (Sub soil). இஃது கற்களையும் பாறைத் துண்டுகளையும் கொண்ட சரளை மண் பகுதியாகும். அதற்கும் கீழாக உள்ள பகுதி அடி நிலைப்பாறை (Bed rock) ஆகும். இவ்வடுக்குகளை எங்கும் உள்ள மண்ணில் காணலாம்.
இக்கால அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மண்ணுக்கு வளமூட்ட செயற்கையான இராசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டு, பயன் படுத்தப்படுகின்றன.