பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வெளியீட்டுரை

எனவே, திருக்குறளுக்கு உரைகள் மிகுதி, அதன் அறிவுப் பெருக்கத்தையே உணர்த்தும், என்க.

‘முன்னம்பலர் உரைகாணினும்
முதற்பாவலர் நூலோ
இன்னம்பலர் உரைகாணினும்
இயல்பிற்றது. மெய்யே!
சொன்னம்பல வென்னில்சில
சொல்வல்லிது மாண்பார்
பொன்னம்பல நாமன்முதற்
புலவீர் நனிகேண்மின்!'

- தனிப்பாடல்.

என்னும் ஒரு பழம் பாடலின் உண்மையை ஒர்க.

மெய்ம்மங்கள் என்றும் உண்மையின் வடிவங்களே. இருப்பு நிலைகளே. வானும், புடவிகளும், கதிரும், விண்மீன்களும், காற்றும், நெருப்பும், நீரும், உலகமும், உயிர்களும், உயிருடல்களும், இவையுள்ளடக்கிய இயற்கையும் மெய்ம்மங்கள்தாம். மாந்தனும் ஒரு மெய்ம்மமே! அவன் சிந்தனைகளும் ஒளியையும் காற்றையும் போலும் மெய்ம்மங்களே! இயற்கையும் மெய்ம்மக்கூறே. அவற்றின் வடிவமே! இனி, இன்னும் தெளிவாகச் சொன்னால், அணுக்களும், அண்டங்களும் அவற்றின் இயக்கங்களும் மெய்ம்மமே! அவற்றின் தவறும் சரியும் கூட மெய்ம்மமே! அவற்றின் விரிவும் விளக்கங்களும் கூட மெய்ம்மமே!

இவற்றின் மெய்ம்ம இருப்பையே திருக்குறள் கூறுகிறது. மெய்ம்மங்களின் இயற்கையின் சுழற்சியிலே மாந்த மெய்ம்மத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்துக் கூர்மைப் படுத்தி, அதன் இயக்க நிலைகளைக் காட்டும் முயற்சியே திருக்குறள். அதன் முடிவு காண்கின்ற முயற்சிகளே உரைகள். அவற்றின் வெற்றியும் தோல்வியும் காலத்தையும் கருத்தையும் பொறுத்தன.

மாந்தருள் ஆண், பெண் பெயர்களும், ஆணுக்குத் தந்தை, மகன், அண்ணன், தம்பி, நண்பன், உறவன், கணவன் - முதலிய பெயர்களும், பெண்ணுக்குத் தாய், மகள், அக்கை, தங்கை, நண்பி, உறவி, மனைவி முதலிய பெயர்களும், மாந்த மெய்ம்மத்தின் இருப்பு மாற்றங்களே! இவர்தம் உறவையும்